இளம் பருவத்திலேயே தமது தந்தைக்குச் சொந்தமான நாணய மாற்று வணிகத்தில் ஈடுபடத் தொடங்கினார் அகமது ஃபைசால் கான். அப்போது அவருக்கு வயது 19.
ராஃபிள்ஸ் பிளேசில் பரபரப்பான சூழலில் நாணயமாற்று வணிகத்தை அவர் கற்றுக்கொண்டார்.
இதையடுத்து, கடந்த 2014ஆம் ஆண்டில் ஃபைசால் 29 வயதாக இருந்தபோது, தந்தையின் ஜிஎம்டி ஜுவல்லர்ஸ் நகைக்கடையை வழி நடத்த உதவி தேவைப்பட, ஃபைசாலின் வாழ்வில் புதிய அத்தி யாயம் தொடங்கியது.
நகை வியாபாரத்தில் அவர் காலடி எடுத்த வைத்தபோது அந்தத் தொழிலைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது.
நகைகளின் விலையை எவ்வாறு நிர்ணயிப்பது, நகைகளின் தரத்தை எவ்வாறு உறுதி செய்வது, எந்த நாடுகளிலிருந்து எத்தகைய நகைகள் வருகின்றன, அவற்றுக்கு எந்தெந்த பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன போன்ற தொழில் நுணுக்கங்களைப் பற்றி அவர் தெரிந்துகொள்வதற்கே மூன்று ஆண்டுகள் ஆகின.
மும்பை, துபாய் போன்ற இடங்களில் நகைச் சந்தைகளுக்குச் சென்று நகை விநியோகம், தயாரிப்பு ஆகியவை பற்றி தாம் கற்றுக்கொண்டதாக 36 வயது திரு ஃபைசால் தெரிவித்தார்.
இதன் விளைவாக நகைத் தொழில் குறித்த தமது அறிவும் அனுபவமும் பெருகியதாக அவர் கூறினார்.
காலத்திற்கு ஏற்ப, ஜிஎம்டி ஜுவல்லர்ஸ் நகைக்கடையின் தோற்றத்தையும் இயங்கும் முறையையும் மாற்றவேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டார் ஃபைசால். சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள கடை 2019ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது.
புதிய நகை வடிவமைப்புகளை
அறிமுகம் செய்து, சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்க ஊழியர் களுக்குப் பயிற்சி அளிப்பதிலும் திரு ஃபைசால் மும்முரம் காட்டினார்.
இதற்கிடையே, இளம் வாடிக்கையாளர்களையும் ஈர்க்க ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் பதிவுகள் கைகொடுத்தன. ஜிஎம்டி ஜுவல்லர்ஸ் தங்கக் கட்டி விற்பனையையும் தொடங்கியது.
வியாபாரம் சூடுபிடிக்கும் நேரத்தில் கொவிட்-19 நெருக்கடிநிலை ஏற்பட்டது.
மின்வர்த்தகத்தின் முக்கியத்
துவத்தை இந்தச் சூழல் உணர வைத்ததாக திரு ஃபைசால் கூறினார். தமது நிறுவனத்தின் இணையப் பக்கம் வாயிலாக வாடிக்கையாளர்கள் நகை வாங்கத் தேவையான வசதிகளைக்கூடிய விரைவில் ஏற்படுத்தித் தர அவர் ஆயத்தமாகி வருகிறார்.
"தங்கள் பெற்றோருக்கு நகைகள் மீது இருந்த மோகம் இளைய தலைமுறையினருக்கு இல்லை. காலம் மாறுவதுடன் தங்க விலை அதிகரித்திருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்," என்று திரு ஃபைசால் கூறினார்.
இணையத்தில் வெறும் நகை
களின் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து நகைகளை வாங்க வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பது கடினம் என்று கூறும் திரு ஃபைசால், இதற்குத் தீர்வு காணும் வகையில் தொழில்நுட்ப அம்சங்
களைப் பயன்படுத்தி பார்ப்பவர் கண்களைக் கவரும் வகையில் நகையைக் காட்டும் அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறார்.
1990களில் ஜிஎம்டி ஜுவல்லர்ஸ் நகைக்கடையைதக் தொடங்கியபோது லிட்டில் இந்தியாவில் அதிக நகைக்கடைகள் இல்லை என்று அவர் கூறினார்.
தற்போது இந்தியாவில் உள்ள பல முன்னணி நகைக்கடைகள் சிங்கப்பூரில் கிளைகளைத் திறந்திருப்பதால் போட்டித்தன்மை அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், பழக்கப்பட்ட கடைகளுக்கே வாடிக்கையாளர்கள் திரும்புவர் என நம்பிக்கை கொண்டுள்ளார் திரு ஃபைசால்.
கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரம் மேம்பட்டதும், ஜிஎம்டி
ஜுவல்லர்ஸ் நகைக்கடை மீண்டும் செழிப்பான நிலைக்கு திரும்பும் என்றார் அவர். தமது நகைக்கடையை வழிநடத்தி, எதிர்காலத்தில் வியாபாரத்தை விரிவுபடுத்த அவர் எண்ணம் கொண்டுள்ளார்.
நேர்காணல்:
ப. பாலசுப்பிரமணியம்