ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நீரில் மூழ்கி ஆடவர் மரணம்

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நீரில் மூழ்கி ஆடவர் மரணம்

2 mins read
b013808e-e5b9-4f0a-990c-6398c88e8bab
ஆடவரை நீரிலிருந்து மீட்கும் இளையர்கள் மூவர். படம்: ஸ்டோம்ப் -

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு (நவம்பர் 6) நீரில் மூழ்கி 47 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து ஸ்டோம்ப் இணையத்தளத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது.

அந்த ஆடவர் நீரில் விழுவதற்கு முன்பு மீன்பிடித்துக்கொண்டு இருந்ததாக நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர், "இளையர்கள் மூவர் நீரில் குதித்து அந்த ஆடவரை மீட்டனர்," என்று கூறினார்.

"போலிஸ், அவசர மருத்துவ வாகனம் வரும்வரை, மீட்கப்பட்ட அந்த ஆடவர்க்கு இருவர் இதய இயக்க மீட்புச் சிகிச்சை (சிபிஆர்) அளித்தனர்.

"அந்த ஆடவரின் மனைவி கழிவறைக்குச் சென்றிருந்தார். கணவர் நீரில் விழுந்தது பற்றி அவருக்குத் தெரியாது.

"அந்த ஆடவரின் மனைவி கழிவறையிலிருந்து திரும்பியவுடன், பலர் அங்கு திரண்டிருந்ததைக் கவனித்தார். புல்வெளியில் தம் கணவர் சுயநினைவின்றிக் கிடப்பதையும் மற்றவர்கள் அவருக்கு சிபிஆர் அளிப்பதையும் அந்த மாது கண்டார்.

"கடவுளிடம் பிரார்த்தனை செய்த அந்த மாது, கணவரின் கழுத்தில் கையை வைத்து நாடித்துடிப்பைச் சோதித்தார். நாடித்துடிப்பு தென்பட்டதாக அவர் கூறினார்.

"போலிஸ் மற்றும் அவசர மருத்துவ வாகனம் சம்பவ இடத்துக்கு வந்தன. அந்த ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்," என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர் விவரித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து இரவு 10.57 மணிக்கு தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக போலிஸ் கூறியது.

"47 வயது ஆடவர் ஒருவர் நீரிலிருந்து மீட்கப்பட்டார். சுயநினைவற்ற நிலையில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்," என்று போலிஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

ஆடவரின் மரணத்தில் சூது இருப்பதாகத் தெரியவில்லை என போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

போலிஸ் விசாரணை தொடர்கிறது.