மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க கோரிய மலேசியரின் மனு தள்ளுபடி

மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க கோரிய மலேசியரின் மனு தள்ளுபடி

2 mins read
a59a069c-d28c-4e70-883a-2654c1bf780d
நாகேந்திரன் கே.தர்மலிங்கம் என்பவரின் மரண தண்டனை விவகாரம் அண்மையில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. படம்: தி ஸ்டார் -

போதைப்பொருள் கடத்திய வழக்கில், தமக்கு மரண தண்டனை விதிப்பதற்கு எதிராக 33 வயது மலேசியரான நாகேந்திரன் கே.தர்மலிங்கத்தின் மனுவை உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 8) தள்ளுபடி செய்தது.

நாளை மறுதினம் புதன்கிழமை (நவம்பர் 10) அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ளது.

எனினும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நாளை (நவம்பர் 9) பிற்பகல் 2.30 மணிக்கு வழக்கு விசாரணை நடைபெறவுள்ள வேளையில், மரண தண்டனையை நிறுத்திவைக்க அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கடத்தி வந்ததற்காக 2009ஆம் ஆண்டு சிங்கப்பூர் அதிகாரிகளால் நாகேந்திரன் கைது செய்யப்பட்டார்.

தமது இடது தொடையில் போதைப்பொருளை பொட்டலமாகக் கட்டி மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அவர் பிடிபட்டார்.

நாகேந்திரன், அறிவாற்றல் குறைபாடு உள்ளவர் என்பதைக் காரணம் காட்டி மரண தண்டனையை நிறுத்துமாறு மனித உரிமைக் குழுக்களும் மற்ற அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், 18 வயதுக்குக்கீழ் உள்ள ஒருவருக்கு இருக்கக்கூடிய மனநிலையே தமக்கு இருப்பதாக நாகேந்திரன் கூறினார்.

அறிவாற்றல் குறைபாடு உள்ள ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது, அனைத்துலகச் சட்டத்தின்கீழ் தடை செய்யப்பட்டிருப்பதாக அவர் வாதிட்டார்.

அறிவாற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் எனக் கூறப்படும் "உள்ளகக் கொள்கை" சிங்கப்பூர் சிறைச்சாலை சேவையிடம் இருப்பதாகவும் நாகேந்திரன் கூறினார். அவரது கூற்றை சிறைச்சாலை சேவை மறுத்துள்ளது.

இந்நிலையில், நாகேந்திரனின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி சீ கீ ஊன், அவரது வற்புறுத்தலுக்கு நம்பகமான அடிப்படை ஆதாரம் இல்லை என்று கூறினார்.

இந்த வழக்கில் நாகேந்திரனுக்கு, 18 வயதுக்குக்கீழ் உள்ள ஒருவருக்கு இருக்கக்கூடிய மனநிலையே இருப்பதாகக் கூறுவது வழக்கறிஞர் எம்.ரவியின் கருத்து என நீதிபதி குறிப்பிட்டார்.

திரு ரவிக்கு மருத்துவ ரீதியாக நிபுணத்துவம் இல்லை என்பதையும் இம்மாதம் 2ஆம் தேதி 26 நிமிடங்களுக்கு மட்டுமே நாகேந்திரனை அவர் சந்தித்தார் என்பதையும் நீதிபதி சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்