தடுப்பூசி போட விருப்பமில்லாதவர்களுக்கு புதிய சுமை
தடுப்பூசி போட விருப்பம் இல்லாதவர்கள், கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டால் அதற்குரிய மருத்துவச் செலவுகளை அவர்களே ஏற்க வேண்டும்.
வரும் டிசம்பர் 8ஆம் தேதியில் இருந்து இந்தப் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
இதனை நேற்று அறிவித்த சுகாதார அமைச்சர் ஓங் யி காங், தடுப்பூசி போட வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருக்கிறார்.
கொவிட்-19 சூழலைச் சமாளித்து வரும் அமைச்சுகளுக்கு இடையிலான பணிக் குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அதன் இணைத் தலைவர்களில் ஒருவரான திரு ஓங், தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடையோர் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"தடுப்பூசி போட விருப்பமில்லாதவர்களுக்கு மருத்துவச் செலவு கள் இருக்க வேண்டாம் என்பதே விருப்பம். ஆனால் தீவிர சிகிச்சை தேவைப்படுவோரில் தடுப்பூசி போடாதவர்கள் பெரும்பங்கு வகிப் பதாலும் சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு வளங்கள் பாதிக்கப்படு வதாலும் இந்த மாற்றம் செய்யப் படுகிறது," என்று அமைச்சர் விளக்கினார்.
தற்போது சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர் மற்றும் வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கும் கொவிட்-19 செலவுகளை அரசாங்கம் முழுமையாக ஏற்று வருகிறது.
புதிய மாற்றத்தின்படி தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதியிருந்தும் போடாதவர்கள் வரும் டிசம்பர் 8ஆம் தேதியிலிருந்து கொவிட்-19 சிகிச்சைக்கான செலவுகளை ஏற்க வேண்டியிருக்கும்.
"இருந்தாலும் தற்போது வழங்கப்பட்டுவரும் கழிவுகளை மருத்துவக் கட்டணங்கள் உள்ளடக்கியிருக்கும். மெடிசேவ் பயன்பாடு மற்றும் மெடிஷீல்ட் லைஃப் கோரிக்கைகளைப் பொருத்து செலவுகள் இருக்கும். இதனால் அரசாங்கத்தின் ஆதரவும் கட்டணச் சலுகைகளும் தொடரும்," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அதே சமயத்தில் மருத்துவக் காரணங்களால் தடுப்பூசி போட முடியாதவர்கள், 12 வயதுக்குக் கீழ் உள்ள தடுப்பூசிக்குத் தகுதி பெறாதவர்களின் கொவிட்-19 மருத்துவச் செலவுகளை அரசாங்கம் பார்த்துக் கொள்ளும்.
கொவிட்-19 தொற்று முன்பின் அறிமுகமில்லாதது. இதனால் பாதிக்கப்படும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், அண்மையில் வெளிநாடு செல்லாதவர்களைத் தவிர அனைவருக்கும் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கதோடு செலவுகளை அரசாங்கம் ஏற்றது என்று பணிக்குழு நேற்று தெரிவித்தது.
கொள்ளைநோய் சூழல் மேம்படும்வரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள பொதுமக்களில் பெரும்பாலோரின் கொவிட்-19 மருத்துவக் கட்டணங்களை அரசாங்கம் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளும் என்றும் குழு கூறியது.
இதற்கிடையே முழுமைாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத தனி நபர்களுக்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை மருத்துவக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள மற்றொரு வாய்ப்பு இதன் மூலம் வழங்கப்படு கிறது.

