சிங்கப்பூர் முழுவதற்குமான புதிய மின்னியல் 'ஜைரோ' சேவை நேற்று தொடங்கப்பட்டது. அதன் மூலம், இதுவரை சில வாரங்கள் கழித்து ஏற்றுக்கொள்ளப்படும் 'ஜைரோ' விண்ணப்பங்கள், இனி சில நிமிடங்களில் ஏற்றுக்கொள்ளப்படும்.
தற்போதைய 'ஜைரோ' முறையில் காகிதப் படிவங்களில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. புதிய 'மின்ஜைரோ' (eGiro) சேவை இனி முழுமையாக மின்னியல் வடிவில் இருக்கும். இணையம் வழியாக கட்டண விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் நேரம் வெகுவாகக் குறையும்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் புதிய சேவையை அறிவித்தார். இவ்வாண்டுக்கான சிங்கப்பூர் புத்தாக்க, தொழில்நுட்ப வாரத்துடன் சேர்த்து நடத்தப்படும் சிங்கப்பூர் நிதித் தொழில்நுட்ப விழாவில் அவர் பேசினார்.
'ஜைரோ' முறை கடந்த 1984ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்கீழ், வங்கிக் கணக்குகளிலிருந்து தொடர்ச்சியாக செலுத்தும் கட்டணங்களை ஒவ்வொரு முறையும் செலுத்தத் தேவையில்லை. 'ஜைரோ' முறைக்கு விண்ணப்பித்தால், கட்டணங்கள் வங்கிக் கணக்குகளிலிருந்து தானாகவே கழித்துக்கொள்ளப்படும். அதேபோல பெறவேண்டிய தொகைக்கும் அதே வழிமுறைதான்.
தற்போதைய 'ஜைரோ' விண்ணப்ப முறையில், காகித வடிவிலான விண்ணப்பப் படிவங்களை நிரப்பி, அவற்றை உரிய அமைப்பிடம் அஞ்சலில் அனுப்ப வேண்டும். அமைப்பும் அதன் பின்னர் வங்கியும் அதைச் சரிபார்க்கும்.
இந்த நடைமுறை முடிய மூன்று முதல் நான்கு வாரங்கள்வரை பிடிக்கும். அதன் பின்னர், தங்கள் வங்கிக் கணக்கில் தானாகவே உரிய கட்டணங்களை வங்கிகள் கழித்துக்கொள்ளும்.
ஆனால் புதிய மின்னியல் சேவையில் பொதுமக்கள், தாங்கள் கட்டணம் செலுத்த வேண்டிய அமைப்பின் இணையத்தளத்துக்கு அல்லது கைபேசிச் செயலிக்குச் சென்று தங்கள் வங்கியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் தங்கள் வங்கியின் இணையச் சேவைக்குள் சென்று, கட்டணத்தைச் செலுத்தும் கணக்கைத் தேர்வு செய்ய வேண்டும்.
சிங்கப்பூரில் தற்போது ஒரு மில்லியன் பேர் 'ஜைரோ' சேவையைப் பயன்படுத்துகின்றனர் என்றும் அந்த எண்ணிக்கை உயரும் என்றும் மின் ஜைரோ திட்டத்துக்கு தலைமை வகித்த திருவாட்டி அனிதா லோ கூறினார். மின்னியல் சேவை வழங்கும் வசதியே அதற்குக் காரணம் என்றார் அவர்.
மின் 'ஜைரோ' திட்டத்தில் தொடக்கமாக எட்டு முக்கிய வங்கி கள் இச்சேவையை வழங்கும்.
டிபிஎஸ்/பிஓஎஸ்பி, ஓசிபிசி, யுஓபி, பேங்க் ஆஃப் சைனா, எச்எஸ்பிசி, மேபேங்க், ஸ்டாண்டர்ட் சார்ட்டட், இன்டஸ்டிரியல் அண்ட் கமர்சியல் பேங்க் ஆஃப் சைனா ஆகியவையே அவை.
மத்திய சேம நிதிக் கழகம், கிரேப்பே, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் உள்ளிட்ட 13 அமைப்பு களுக்குக் கட்டணம் செலுத்த தற்போது மின்சேவையைப் பயன் படுத்தலாம்.
சிங்கப்பூரில் கட்டணம் பெறும் அனைத்து அமைப்புகளையும் இந்த முறையில் சேர்க்க இடமுண்டு என்றார் திருவாட்டி லோ.