சாங்கி வட்டாரத்தில் அமையவிருக்கும் ஏவியேஷன் பார்க் எம்ஆர்டி ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கப்படும்.
நிலையம் அமையவிருக்கும் தீவு குறுக்கு ரயில் பாதைக்கான இரண்டு குத்தகைகளை நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று கட்டுமானங்களுக்கு வழங்கியது. இரண்டு குத்தகைகளும் சுமார் $766 மில்லியன் மதிப்புள்ளவை.
நிலத்தடியில் கட்டபடவுள்ள ஏவியேஷன் பார்க் ரயில் நிலையம், சாங்கி கோஸ்ட் ரோட்டுக்கும் ஏவியேஷன் பார்க் ரோட்டுக்கும் அருகில் இருக்கும். ஹொக் லியென் செங் இன்ஃபிராஸ்டிரக்ச்சர் எனும் நிறுவனம் நிலையத்தைக் கட்டும் $320 மில்லியன் மதிப்புள்ள குத்தகையைப் பெற்றது. கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் தொடங்கும்.
அதில் சுரங்கங்களும் அமைக்கப்படும் என்பதால் கட்டுமானப் பணிகள் சவாலாக இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.