போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக மலேசியரான 33 வயது நாகேந்திரன் கே. தர்மலிங்கத்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நாளை நிறைவேற்றப்பட இருக்கிறது.
இந்நிலையில், நாகேந்திரனின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்குள் போதைமிகு அபினைக் கடத்திய குற்றத்துக்காக நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 21 வயது.
மரண தண்டனையை ரத்து செய்ய மனுதாக்கல் செய்த நாகேந்திரன், தமக்கு அறிவாற்றல்
குன்றியநிலை இருப்பதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.
33 வயது என்றபோதிலும் தமக்கு 18 வயது இளையரின் அறிவாற்றல் மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அறிவாற்றல் குன்றியோரை
சிங்கப்பூர் சிறைத் துறை தூக்கிலிடுவதில்லை என்று தமது
மனுவில் அவர் குறிப்பிட்டார். இதைச் சிறைத் துறை மறுத்து
விட்டது. நாகேந்திரனுக்கு 18 வயது இளையரின் அறிவாற்றல் இருப்பதற்கு நம்பகமான ஆதாரம் ஏதும் இல்லை என்று நீதிபதி சீ கீ ஓன் கூறினார்.
அது அவருடைய வழக்கறிஞரான திரு எம். ரவியின் கருத்து என்றார் அவர்.
திரு ரவிக்கு மருத்துவ நிபுணத்துவம் இல்லை என்றும் இம்மாதம் 2ஆம் தேதியன்று வெறும் 26 நிமிடங்களுக்கு நாகேந்திரனை அவர் சந்தித்ததாகவும் நீதிபதி சீ தெரிவித்தார். நாகேந்திரன் அறிவாற்றல் குன்றியவர் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆபத்து என்றும் குற்றம் என்றும் தெரிந்தே நாகேந்திரன் போதைப்பொருள் கடத்தியதாக மேல் முறையீடு நீதிமன்றம் கூறியது.

