சுற்றுச்சூழலுக்கு ஏதுவான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க ஆணையம் கடப்பாடு
நிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் அதன் ஒப்பந்ததாரர்களுக்கு வேலையிட விபத்துகளும் காயமடையும் சம்பவங்களும் கணிசமாகக் குறைந்துள்ளன.
2016ஆம் ஆண்டில் நூறாயிரம் ஊழியர்களில் 161.8 என்று இருந்த காயம் அடையும் விகிதம் கடந்த ஆண்டில் 78.2க்கு குறைந்துள்ளது. இதற்கு நேர்மாறாக கட்டுமானத் துறையில் கடந்த ஆண்டு முழுவதும் அந்த விகிதம் நூறாயிரம் பேருக்கு 424 என்று இருந்தது. நிறுவனங்கள் வேலையிடப் பாதுகாப்பை மேம்படுத்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை இந்த கொவிட்-19 நெருக்கடி காலம் ஏற்படுத்தி தந்துள்ளது என்று கூறியுள்ளார் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன்.
சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல், பாதுகாப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி தொடர்பான 23வது ஆண்டுக் கூட்டம் நேற்று மெய்நிகர் வாயிலாக நடந்தது. அதில் கலந்துகொண்ட அமைச்சர் இவ்வாறு கூறினார்.
வேலையிடங்களில் சிறந்த முறையிலான பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலைக் கட்டிக்காக்கும் நடைமுறைகளைக் கொண்டுள்ள 69 நிறுவனங்களையும் தனிப்பட்டவர்களையும் நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று கௌரவித்தது.
இவ்வாண்டுக்கான முதல் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை புத்தாக்க விருதுகளை 'ஷின்கோன் இன்டஸ்ரியல்', 'பென்டா ஓஷியன் கன்ஸ்ட்ரக்ஷன்' மற்றும் 'பாச்சி சொலடான்சே சிங்கப்பூர்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து பெற்றன.
'ஷின்கோன்' நிறுவனம் தற்காலிக நடைபாதை அமைக்க கான்கிரீட் தரைக்குப் பதிலாக மறுபயனீடு செய்யக்கூடிய தரையை அமைத்திருந்தது. ஓஷியன் மற்றும் பாச்சி சொல்டான்செ நிறுவனங்கள் சத்தத்தைக் குறைக்கக்கூடிய புதுவிதமான தடுப்புகளைப் பயன் படுத்தியதற்காக அந்த விருதினைப் பெற்றன.
இந்நிலையில் விபத்துகள் அடிக்கடி நடக்கக்கூடிய வேலை இடங்களைக் கண்காணிப்பதற்கு காணொளி மூலம் பகுப்பாய்வு செய்யும் முறையை நிலப் போக்குவரத்து ஆணையம் புகுத்தியுள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் இப்போது கட்டுமானத் தளங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக குறுக்குத் தீவு ரயில் தடக் கட்டுமானத்தில் இந்த நடைமுறை பயன்படுத்தப்படுகிறது.
மேலும், நிலப் போக்குவரத்து ஆணையம், தனது புதிய கட்டுமானத் திட்டங்களில் சோர்வு மேலாண்மை முறையையும் சேர்க்கவுள்ளதாகக் கூறியது. மேலும், அதன் கட்டுமானத் தளங்களில் கரியமில வாயு வெளியீட்டைக் கொண்டுள்ள தளவாடங்கள் மற்றும் நடைமுறைகளைக் கண்காணித்து வருவதாகக் கூறியது. மேலும், தண்ணீர், எரிசக்தி பயன்பாடுகளைக் குறைப்பது குறித்தும் திட்டமிட்டு வருகிறது. அத்துடன் மறுபயனீடு செய்யப்பட்ட உலோகத்தைக் கொண்டு உருவாக்கப்படும் பசுமை சிமெண்டுகளைப் பயன்படுத்தத் திட்டமிடுவதாகவும் ஆணையம் கூறியது. அதோடு, மறுபயனீடு செய்யக்கூடிய வகையில் உலோகங்களால் உருவாக்கப்படும் வடிகாலைப் பயன்படுத்தும் உத்தி குறித்தும் ஆணையம் திட்டம் வைத்துள்ளதாகக் கூறியது. கரியமில வாயு வெளியீட்டைக் குறைக்கும் வகையிலும் கட்டுமானத் துறையில் சத்தத்தைக் குறைக்கும் வகையிலும் நிலைத்தன்மை வாய்ந்த சுற்றுச்சூழலுக்கு ஏதுவான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும் ஆணையம் கடப்பாடு கொண்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.