சிங்கப்பூரின் விலங்கியல் தோட்டம் அல்லது வனவிலங்குப் பூங்காக்களில் வாழும் மிருகங்களுக்கு இதுவரை கொவிட்-19 தடுப்பூசி போடப்படவில்லை என்றும் தற்போது போடும் திட்டம் இல்லை என்றும் மண்டாய் வனவிலங்குக் குழுமம் தெரிவித்துள்ளது.
விலங்குகளுக்குத் தடுப்பூசி எந்த வகையில் பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பது குறித்து மேலும் ஆராய்வது முக்கியம் என்றும் கூறப்பட்டது. கடந்த சனிக்கிழமையன்று சிங்கப்பூரின் 'நைட் சஃபாரி'யில் உள்ள நான்கு ஆசியவகை சிங்கங்களுக்கு கொவிட்-19 இருப்பது உறுதியாகியது.
இந்த நான்கு சிங்கங்களிடமும் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தின் ஆப்பிரிக்க சிங்கம் ஒன்றிடமும் மிதமான இருமல், தும்மல், சோர்வு அறிகுறிகள் காணப்பட்டதாகக் கூறப்பட்டது. மண்டாய் வனவிலங்குக் குழுமத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு கொவிட்-19 இருப்பது உறுதியானதை அடுத்து சிங்கங்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு அவற்றுக்கும் கொவிட்-19 இருப்பது உறுதிசெய்யப்பட்டது.