கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுவனுக்கு அதனால் அரிய வகை அழற்சி நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அச்சிறுவன் ஒரு வாரத்திற்கு மேல் தங்க வேண்டியிருந்தது.
இதையடுத்து, கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து உயர்கவனிப்பு படுக்கைப் பிரிவுக்குச் சிறுவன் நேற்று முன்தினம் மாற்றப்பட்டதாக சிறுவனின் தாயார் திருவாட்டி மெரிலின் கெகனின்டின், 39, தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 1ஆம் தேதியன்று தொடர் காய்ச்சல், வாந்தி, குளிர் நடுக்கம், கடுமையான வயிற்று வலி காரணத்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அலி ஸஃபிர். உடல் உறுப்புகள் பலவற்றைத் தாக்கக்கூடிய 'எம்ஐஎஸ்-சி', சிறுவனுக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
இது எதனால் வருகிறது என்பது இன்னும் அறியப்படவில்லை.
சிறாரிடையே கொவிட்-19 தொடர்பாக பதிவாகியுள்ள சுமார் 8,000 சம்பவங்களில், ஐந்து சிறுவர்களுக்கு 'எம்ஐஎஸ்-சி' இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஏற்கெனவே சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறியிருந்தார்.
தற்போது சிறிதளவில் பால் மட்டுமே அலி உட்கொண்டு வருவதாக அவரின் தாயார் தெரிவித்தார்.