கிருமி பரவும் சூழ்நிலையில் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அதிகாரிகளின் பங்கு முன்பை விட தற்போது இன்றியமையாதது என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது கூறியுள்ளார்.
"தொற்றுநோய் பரவல், பயங்கரவாதம் உள்ளிட்ட அபாயங்களை வர்த்தகங்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அதிகாரிகளின் பங்கு மதிப்பு மிக்கது. "வேலையிடத்தில் காயம் ஏற்படும் சம்பவங்களைக் குறைக்கவும் கிருமிப்பரவலைத் தடுக்கவும் அத்தகைய அதிகாரிகளின் பங்கை நிறுவனங்கள் அங்கீகரிக்க வேண்டும்," என்று தற்காப்பு மூத்த துணை அமைச்சருமான அமைச்சர் ஸாக்கி கேட்டுக் கொண்டார்.
"அதிகாரிகளின் பங்கு அவர் களுடைய பொறுப்பு மட்டும் அல்ல. ஒரு நிறுவனத்தின் பொறுப்பே அவர்களிடத்தில் உள்ளது. அவர்களுக்குத் தேவையான வளங்களை நிறுவனங்கள் வழங்க வேண்டும்," என்று மேலும் அவர் தெரிவித்தார். தேவன் நாயர் வேலை நியமன, வேலைத் தகுதி கழகத்தின் மாநாடு நேற்று 'ஸூம்' தளத்தில் நடைபெற்றது. மேலும் பேசிய அமைச்சர் ஸாக்கி முகம்மது, வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அதிகாரிகளுக்கு அரசாங்கம் ஆதரவாக இருக்கும் என்றார்.

