சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகள் காலப்போக்கில் முதன்மை வட்டாரமாக ஆகக்கூடும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார். 'கிரேட்டர் சௌதர்ன் வாட்டர்ஃபிரண்ட்' போன்ற நகருக்கு அருகில், கடலை நோக்கிய பகுதியை முதன்மை பொது வீடமைப்புப் பகுதியாக பலரும் பரிசீலிக்கக்
கூடும் என்றார் அவர்.
'மணி எஃப்எம் 89.3' வானொலி நேற்று ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற குமாரி இந்திராணி, ஒவ்வொருவரும் முதன்மை வட்டாரமாக ஏற்கத் தயாராக இருக்கும் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றின் மீது கவனம் செலுத்துவதே அரசாங்கத்தின் அணுகுமுறை என்றார்.
முதன்மை வட்டார பொது வீடமைப்பு என்னும் புதிய திட்டம் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இவ்வட்டாரங்களில் சாத்தியப்படக்கூடிய இடங்களில் பொது வாடகை வீடுகளும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்காகக் கட்டப்படும்.
இந்தத் திட்டத்தின்கீழ் தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் (பிடிஓ) முதல் திட்டம் இம்மாதம் ரோச்சோரில் தொடங்கும். அங்கு அமையவுள்ள வீடுகளுக்கான விற்பனையையும் இம்மாதத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
புதிய திட்டத்தின்கீழ் முதன்மை வட்டாரத்தில் கட்டப்பட உள்ள வீட்டை வாங்குவோர் குைறந்தபட்சம் பத்தாண்டு காலம் அந்த வீட்டில் வசிக்க வேண்டும். மேலும், அந்த வீட்டை மறுவிற்பனை செய்யும்போது அரசாங்கம் அளித்த கூடுதல் மானியங்கள் மீட்டுக்கொள்ளப்படும்.
முதன்மை வட்டாரம் என்பது எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்று நேற்று குமாரி இந்திராணியிடம் வினவப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், எதுவும் முழுமையாக உருவாவதற்கு முன்பு அதைப் பற்றிய ஒவ்வோர் அம்சத்தையும் விளக்குவது கடினம் என்றார். அதேநேரம், முதன்மை வட்டாரம் என்பதற்கு இனி அமையவிருக்கும் 'கிரேட்டர் சௌதர்ன் வாட்டர்ஃபிரண்ட்' நல்ல உதாரணம் என்றார் அவர்.
கடலுக்கு அருகே அமைவதாலும் பல வசதிகளைப் பெறக்கூடிய மத்திய பகுதியாக இருக்கும் என்பதாலும் இதனை முதன்மை வட்டாரம் என்று குறிப்பிடலாம் என்றார் தேசிய வளர்ச்சி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி.
'கிரேட்டர் சௌதர்ன் வாட்டர்ஃபிரண்ட்' என்பது அடுத்த ஐந்தாண்டு முதல் பத்தாண்டு வரையில் கட்டம் கட்டமாக உருவாக்கப் பட இருக்கும் நகர வாழ்விட வட்டாரம். பாசிர் பாஞ்சாங் தொடங்கி மரினா ஈஸ்ட் வரை நீளும் இப்பகுதி புதிய, பெரிய முகப்பாக அமையக்கூடும்.
"முதன்மை வட்டாரம் தொடர்பாக எடுத்த எடுப்பிலேயே அவ
சரம் காட்ட விரும்பவில்லை. காலப்போக்கில் வெவ்வேறு பகுதிகள் முதன்மை வட்டாரமாக ஆகக்
கூடும். எந்தப் பகுதியை முதன்மை வட்டாரம் என ஒவ்வொருவரும் ஏற்கத் தயாராக இருக்கிறார்களோ அதன் மீது அரசாங்கம் கவனம் செலுத்தி உரிய நேரத்தில் அது தொடர்பான அறிவிப்பை வெளி
யிடும்," என்று அவர் விளக்கினார்.
முதன்மை வட்டார பொது வீடமைப்பு குறித்து இதற்கு முன்னர் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கருத்துரைத்திருந்தார்.
மத்திய பகுதியிலும் நகர மையத்திற்கு மிக அருகிலும் இருக்கும் பகுதிகள் அதன் சிறப்புக்கூறு
களின் அடிப்படையில் முதன்மை வட்டாரத்திற்குத் தகுதிபெறக்கூடும் என்று அவர் கூறியிருந்தார்.
முதன்மை, மத்திய வட்டாரங்களில் அமையும் பொது வீடமைப்பை கட்டுப்படியாகக்கூடியனவாகவும் அனைத்துப் பிரிவு சிங்கப்பூரர்களை உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்தப் புதிய திட்டம் உருவாக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஓராண்டு காலம் இது தொடர்பாக பொதுமக்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோ சனைக் கூட்டங்களில் பங்கேற்ற 7,500க்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் தங்களது யோசனைகளையும் பரிந்துரைகளையும் கூறினர்.
இந்திராணி ராஜா: ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ளும் வட்டாரம் மீது கவனம் செலுத்தப்படும்