வெளிநாடுகளில் ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள உள்ளூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிறுவன ஆற்றல் மேம்பாட்டுக்கான தொழில்நுட்பத் திட்டம் மேலும் வலுப்படுத்தப்படும். அதன் மூலம் உள்ளூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் வெளிநாட்டு ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் உதவும் திறனாளர்களுக்கான செலவுகள் ஈடுசெய்யப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
'டி-அப்' திட்டத்தின்கீழ் உள்ளூர் நிறுவனங்கள் அவற்றின் போட்டித்தன்மையை அதிகப்படுத்துவதில் உதவ, ஏஸ்டார் எனும் அறிவியல், தொழில்நுட்ப ஆய்வுக் கழகம் அதன் ஆய்வு அறிவியலாளர்களையும் பொறியாளர்களையும் அனுப்பும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல், டி-அப் திட்டத்திற்கான தகுதிச் செலவுகள், திறனாளர் உதவி மற்றும் மனிதவளச் செலவுகளுடன், தங்கும் செலவுகளுக்கான ஊக்கத்தொகை, விமானக் கட்டணம் போன்ற வெளிநாட்டுச் செலவு
களைச் சேர்க்கும் வகையில் நீட்டிக்கப்படும்.
இத்திட்டம் 2003ஆம் ஆண்டில் அறிமுகமானதிலிருந்து இதுவரை 850 உள்ளூர் நிறுவனங்களுக்கு 950க்கு மேற்பட்ட ஆய்வு அறிவியலாளர்களும் பொறியாளர்களும் அனுப்பப்பட்டுள்ளனர்.
"இது வெளிநாடுகளில் ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள உள்ளூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்கும்," என்று வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கூறினார்.
நேற்று நடைபெற்ற ஏஸ்டார் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தின நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இன்றோடு முடிவடையும் சிங்கப்பூர் புத்தாக்க, தொழில்நுட்ப வாரத்தின் ஒரு பகுதியாக இந்நிகழ்வு நடைபெற்றது.
மற்ற நிறுவனங்களுக்கு ஆதரவுக் கரம் அளித்த மூன்று ஏஸ்டார் ஆய்வு அறிவியலாளர்களுக்கும் பொறியாளர்களுக்கும் தங்கள் உன்னத சேவைக்காக நேற்று விருதளித்து சிறப்பிக்கப்பட்டது.
"நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பத் தேவைகளைத் திட்டமிடவும், வணிக நலன்களை மேம்படுத்தவும் அவர்களின் கண்டுபிடிப்பு பயணத்தை எளிதாக்கவும் உதவும் திட்டங்கள் தயாராக உள்ளன. நிறுவனங்கள் அவற்றைப் பயன்
படுத்திக்கொள்ளலாம்.
"நிறுவனங்கள் தங்கள் தொழில்துறையின் தேவைகளை சிறப்பாகக் கண்டறிந்து, பங்காளித்துவ அடிப் படையில் இணைந்து செயல்படும் போது கிடைக்கக்கூடிய வர்த்தக செலவுச் சிக்கனத்தைப் பெற அது போன்ற பங்காளித்துவம் முக்கியம் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். அதேநேரம், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தைப் பெருக்கிக்கொள்வதற்கான தளங்களை அரசாங்கம் அமைத்துக் கொடுக்கும்.
"எனவே, ஆய்வு மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகளை உள்ளூர் நிறுவனங்கள் நன்கு பயன்
படுத்திக்கொண்டு வர்த்தகத்தில் அடுத்த நிலைக்குச் செல்ல அனை வரும் இணைந்து பணியாற்றுவோம்," என்றார் அமைச்சர் கான்.