சிங்கப்பூரும் பிரான்சும் இருநாட்டுக் கலைஞர்கள் மற்றும் கலைப் பயிற்றுநர்களுக்கிடையிலான ஒத்துழைப்பையும் பரிமாற்றங்களையும் எதிர்பார்ப்பதாக சிங்கப்பூரின் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
யுனெஸ்கோவின் 41வது பொது மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரிஸ் நகருக்குச் சென்ற அவர், பிரான்ஸ் கலாசாரத் துறை அமைச்சர் திருவாட்டி ரோஸ்லின் பேக்லாட்டைச் சந்தித்தார். சமூக முன்னேற்றத்திற்காக கலைகளையும் கலாசாரத்தையும் பிரான்ஸ் பயன்படுத்தும் விதம் குறித்து சிங்கப்பூர் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டி இருப்பதாக அப்போது திரு டோங் குறிப்பிட்டார்.
மேலும், தென்கிழக்கு ஆசிய மரபு, கலாசாரம் பற்றி அறிந்துகொள்ள பிரான்சுக்கு சிங்கப்பூர் தனித்துவமான ஒரு தளம் என்றார் அவர்.
தொழில்நுட்பம், புத்தாக்கம் போன்றவற்றைப் பயன்படுத்தி நமது மரபைக் கட்டிக்காப்பதற்கு முன்னுரிமை தருவது தொடர்பாக பிரான்ஸ் அமைச்சருடன் ஆலோசனை நடத்தியதாக திரு டோங் தமது ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார்.

