செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
fb9a2957-ca52-493c-a058-07ceba2e2197
-

திறன் இடைவெளியைக் குறைக்க பிரதமர் லீ அழைப்பு

மின்னிலக்கத் திறன்களில் கைதேர்ந்தவர்களுக்கும் அவ்வளவாகத் திறன்கள் இல்லாதவர்களுக்கும் இடையிலான வாய்ப்புகள் தொடர்பான இடைவெளியை எதிர்கொள்ள எடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆசிய பசிஃபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்பு (ஏபெக்) தலைமை தாங்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். மின்னிலக்கப் பொருளியலில் மேலும் பலரை அர்த்தமுள்ள வகையில் பங்குபெற வைப்பதே இலக்கு என்றார் பிரதமர் லீ. ஏபெக் மெய்நிகர் மாநாட்டில் அவரது உரை ஒளிபரப்பப்பட்டது.

மக்களின் அன்றாட வாழ்க்கையை உலகளாவிய மின்னிலக்கக் கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும் என்றார் திரு லீ. அதுமட்டுமல்லாமல் அனைத்து பங்குதாரர்களையும் அது உள்ளடக்க வேண்டும் என்றும் மின்னிலக்கச் சவால்களைச் சமாளிக்க பல்வேறு துறைகளிடையே ஒரே மாதிரியான நடைமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் லீ பரிந்துரைத்தார்.

தன்முனைப்புச் சொற்பொழிவு:

'மனசே மகிழ்ச்சி பழகு!'

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) வரும் ஞாயிற்றுக்கிழமை 14ஆம் தேதி மாலை மணி 6.00 முதல் 7.00 மணி வரை 'மனசே மகிழ்ச்சி பழகு!' என்ற தலைப்பில் தன்முனைப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியை இணையம் வழியாக நடத்தவிருக்கிறது.

பயிலரங்குகள் நடத்துவதிலும் சமூக சேவையிலும் அனுபவம் வாய்ந்த அனைத்துலக வாழ்வியல் ஆலோசகர் டாக்டர் ஃபஜிலா ஆசாத் இச்சொற்பொழிவை ஆற்றுவார். கேள்வி பதில் அங்கமும் இடம்பெறும். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான ஸூம் அடையாள எண்: 815 6889 5888 நுழைவுக் குறியீடு: JMCSG அனுமதி இலவசம்.

தீப்பற்றி எரிந்த மின்சைக்கிள்;

90 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

பிபிட் சாலையில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புக் கட்டடத்தின் ஒன்பதாவது மாடியில் மின்னூட்டப்பட்டுக் கொண்டிருந்த மின்சைக்கிள் ஒன்று நேற்று முன்தின இரவு தீப்பற்றி எரிந்தது.

பிபிட் சாலை புளோக் 94ன் ஒன்பதாவது மாடியில் பொதுத் தாழ்வாரத்தில் இருந்த மின்சைக்கிள் தீப்பிடித்துக் கொண்டதாக இரவு 8.05 மணி அளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் தீயை அணைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 90 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேல்முறையீட்டை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி

குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக ஒய்வுபெற்ற சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரிக்கு ஒரு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறைக்குச் சென்றால் $273,000க்கும் அதிகமான ஓய்வூதியத்தைத் தாம் இழக்க நேரிடும் என்று கூறி அபராதம் செலுத்துமாறு தீர்ப்பளிக்கும்படி மேல்முறையீடு செய்தார் 55 வயது எம். ரவீந்திரன்.

ஆனால் இதை தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் ஏற்க மறுத்தார். இருப்பினும், ரவீந்திரனின் சிறைத் தண்டனையை ஐந்து நாட்களுக்குக் குறைத்தார்.