கொவிட்-19 நோயாளி ஒருவருடன் தொடர்பில் இருந்த காரணத்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என 34 வயது மாது ஒருவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 'பிசிஆர்' பரிசோதனை முடிவுகள் மூலம் கிருமித்தொற்று இல்லை என்பதை மாது உறுதிசெய்ய வேண்டும்.
இருப்பினும், பரிசோதனை முடிவு வெளிவராத நிலையில் குடும்ப உறுப்பினர் ஒருவரது 'டிரேஸ்டுகெதர்' கருவியைக் கொண்டு அந்த மாது வெவ்வேறு இடங்களுக்குச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஆள் மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதன் சந்தேகத்தில் மாது கைது செய்யப்பட்டுள்ளதாக போலிசார் நேற்று அறிக்கை வெளியிட்டது.
குடும்ப உறுப்பினரது 'டிரேஸ்டுகெதர்' கருவியை ஏப்ரல் 30, மே 2 ஆகிய தேதிகளில் மூன்று முறை மாது பயன்படுத்தி இருந்தது குறித்து தங்களுக்கு செப்டம்பர் 3ஆம் தேதியன்று புகார் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.
இன்று ஆள் மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக மாது மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
இக்குற்றத்திற்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

