தன் தாயாரையும் பாட்டியையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர், கொலைகள் நடந்த தினத்தன்று 'எல்எஸ்டி' என்ற ஒருவகை போதைப்பொருளை தான் உட்கொண்டிருந்ததை நீதிமன்றத்தில் நேற்று ஒப்புக்கொண்டார். 'எல்எஸ்டி' உட்கொண்டதற்காகவும் 'எல்எஸ்டி' மற்றும் கஞ்சா வைத்திருந்ததற்காகவும்
24 வயது கேப்ரியல் லியன் கோவுக்கு 22 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 'எல்எஸ்டி' உட்கொண்டவரிடம் கடும் பதற்றம், சித்தப்பிரமை, குழப்பம், மருட்சி போன்ற அறிகுறிகள் காணப்படும் என்று மத்தியப் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோ மீதான கொலைக் குற்றச்சாட்டுகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
கோ தன்னுடைய தாயாரான 56 வயது திருவாட்டி லீ சோ முய், பாட்டியான 90 வயது திருவாட்டி சீ கெங் கெங் இருவரையும் 2019, அக்டோபர் 27ஆம் தேதியன்று காமன்வெல்த் அவென்யூ புளோக் 7Aல் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொலைகள் இரவு 7.25 மணியளவில் ஏழாவது மாடியின் இரு வேறு வீடுகளில் நடந்ததாகக் கூறப்படுகிறது.