மலேசியர் அல்லாத ஒர்க் பெர்மிட் வைத்திருப்பவர்களின் முதலாளிகளுக்கு புதிய சலுகை
மலேசியர் அல்லாத ஒர்க் பெர்மிட் வைத்திருக்கும் ஊழியர்களின் முதலாளிகள், வீட்டில் தங்கும் உத்தரவு மற்றும் அதன் தொடர்புடைய கொவிட்-19 பரிசோதனைகளின் செலவுகளை 12 மாதங்களுக்குள் அதே ஊழியரை வேலைக்கு அமர்த்தும் மற்றொரு முதலாளியுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
வீட்டில் தங்கும் உத்தரவு முடித்த 12 மாதங்களுக்குள் ஊழியர் வேறொரு முதலாளிக்கு மாற்றப்பட்டால் அதற்காகும் செவை பகிர்ந்துகொள்ளலாம் என்று மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது.
இது அனைத்துத் துறைகளிலும் உள்ள முதலாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என்று அமைச்சு தெரிவித்தது.
இடமாற்றம் செய்யப்பட்ட வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் தங்கள் வீட்டில் தங்கும் உத்தரவு மற்றும் அதன் தொடர்பான கொவிட்-19 சோதனைகளின் செலவுகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் முன்மொழியப்பட்ட முந்தைய பரிந்துரையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பகிரும் தொகை தற்போதைய முதலாளி செலுத்தியதைவிட அதிகமாக இருக்கக்கூடாது.
தற்போதைய மற்றும் புதிய முதலாளி இருவரும் எழுத்துபூர்வ ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு, ஒப்பந்தத்தின் தேதியிலிருந்து ஓர் ஆண்டிலிருந்து அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அவர்கள் செலுத்தியதை விட அதிகமாகப் பெறவில்லை என்பதைக் காட்ட அமைச்சுக்கு ஒப்பந்தத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
அத்தகைய தொழிலாளர்களின் தற்போதைய முதலாளிகள் 12 மாத காலகட்டத்தில் ஒர்க் பெர்மிட் வைத்திருப்பவர் எவ்வளவு காலம் பணிபுரிந்தார் என்பதற்கு விகிதாசார அடிப்படையில் செலவுகளை ஏற்க வேண்டும் என்று அமைச்சு கூறியது.
ஓர் ஊழியரின் வீட்டில் தங்கும் உத்தரவு மற்றும் அதன் தொடர்புடைய கொவிட்-19 பரிசோதனைகளுக்கு $1,800 செலுத்திய முதலாளி Aயை அமைச்சு உதாரணம் காட்டியது. அந்த ஊழியர் முதலாளி Bக்கு மாற்றப்படுவதற்கு முன் ஆறு மாதங்களுக்கு முதலாளி Aயிடம் பணிபுரிந்தார்.
இந்தச் சூழ்நிலையில், இரண்டு முதலாளிகளும் வேலை செய்யும் மாதங்களின் அடிப்படையில் செலவுகளை மதிப்பிட ஒப்புக்கொண்டால், முதலாளி A $900 செலவைத் தாங்கி, மீதமுள்ள $900ஐ முதலாளி Bயிடம் இருந்து கோர வேண்டும்.
மற்றொரு சூழ்நிலையில், ஊழியரின் வீட்டில் தங்கும் உத்தரவு மற்றும் அதன் தொடர்புடைய கொவிட்-19 பரிசோதனைகளுக்கு முதலாளி A $1,800 செலுத்தினார். ஆனால், இந்த முறை, அந்த ஊழியர் முதலாளி Aயிடம் மூன்று மாதங்கள் பணிபுரிந்தார், ஐந்து மாதங்களுக்கு முதலாளி Bக்கு மாற்றப்பட்டார், பின்னர் முதலாளி Cக்கு மாற்றப்பட்டார்.
மூன்று முதலாளிகளும் ஊழியர் வேலை செய்த மாதங்களின் அடிப்படையில் செலவுகளை மதிப்பிட ஒப்புக்கொண்டனர்.
இந்தச் சூழ்நிலையில், முதலாளி A, அந்த ஊழியர் தன்னிடம் பணிபுரிந்த மூன்று மாதங்களுக்கான செலவுகளில் $450ஐ ஏற்க வேண்டும் என்றும் மீதமுள்ள $1,350ஐ முதலாளி Bயிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றும் அமைச்சு விவரித்தது.
அதன் பிறகு, ஊழியர் தன்னிடம் வேலை செய்த ஐந்து மாதங்களுக்கான $750 செலவை முதலாளி B ஏற்க வேண்டும் மற்றும் மீதமுள்ள $600ஐ முதலாளி Cயிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும்.
ஊழியரின் இடமாற்றத்திற்காக வேலைவாய்ப்பு முகவர் சேவைகளைப் பயன்படுத்துபவர்கள், செலவினப் பகிர்வை எளிதாக்குவதற்கு முகவையின் உதவியை நாட வேண்டும் என்று அமைச்சு மேலும் கூறியது.
ஒர்க் பெர்மிட் வைத்திருக்கும் மலேசியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்று கூறிய அமைச்சு, காரணம் அவர்கள் தங்கள் முதலாளியின் ஒப்புதலைப் பெறாமல் முதலாளிகளை மாற்ற முடியும் என்றது.
அதற்குப் பதிலாக, ஒர்க் பெர்மிட் வைத்திருக்கும் மலேசியர்களின் முதலாளிகள் குறைந்தபட்ச வேலைவாய்ப்பு காலம் அல்லது வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களில் முடிவடைவதற்கான அறிவிப்பு காலம் போன்ற வேலைவாய்ப்பு விதிமுறைகளைக் கருத்தில் கொள்ள விரும்பலாம். இந்த விதிமுறைகள் பரஸ்பர அளவில் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். மேலும் அது கால அளவில் நியாயமானதாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சு கூறியது.
"ஒர்க் பெர்மிட் வைத்திருப்பவர் அத்தகைய வேலைவாய்ப்பு விதிமுறைகளை மீறினால், அவர்கள் வீட்டில் தங்கும் உத்தரவு மற்றும் அதன் தொடர்புடைய கொவிட்-19 பரிசோதனை செலவுகளை முதலாளிக்கு திருப்பிச் செலுத்த வேண்டும். அவர்களின் சேவையின் காலத்தைப் பொறுத்து, திருப்பிச் செலுத்துதல் பகுதியாக அல்லது முழுமையாக பணம் செலுத்தப்படலாம், "என்று விளக்கப்பட்டது.