உலக அளவில் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையால், கொவிட்-19 நோய்ப் பரவலைச் சமாளிப்பதில் அனைத்துலக ஒருங்கிணைப்பு போதாமல் போனது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார். வசதி குறைந்த நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பது உறுதிசெய்யப்படாததை அவர் உதாரணமாகச் சுட்டினார்.
உலகக் கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள், பன்னாட்டு அரசியல் பதற்றம் அதிகாரிப்பு ஆகியவற்றுக்கிடையே கொவிட்-19 நோய்ப்பரவலுக்குப் பிந்தைய சூழலில் நிலையற்ற, சிக்கலான மீட்சியைக் கடந்துசெல்ல வேண்டும் என்று திரு ஹெங் குறிப்பிட்டார். இச்சூழலில் உலகளாவிய தலைமைத்துவத்தில் உள்ள பற்றாக்குறையை நிரப்புவது மிகவும் முக்கியம் என்று துணைப் பிரதமர் கூறினார்.
சீனாவும் அமெரிக்காவும் அண்மையில் கூட்டுசேர்ந்து, கரி யமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் கரியைப் பயன்படுத்துவதைப் படிப்படியாக ஒழிக்கவும் உறுதி கூறியுள்ளன. இது நம்பிக்கை அளிப்பதாக திரு ஹெங் குறிப்பிட்டார்.
இருப்பினும், உலகமயம் தொடர்பான இணக்கத்தில் ஏற்பட்டுள்ள விரிசலைச் சரிசெய்யவும் பொருளியல் பங்காளித்துவத்தை மேம் படுத்தி பருவநிலை மாற்ற நெருக் கடியை எதிர்கொள்ளவும் கூடுதல் தலைமைத்துவ உணர்வு தேவைப் படுவதாக அவர் சொன்னார்.
பொருளியல் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் அமைச்சரான திரு ஹெங், மரினா பே சாண்ட்ஸ் வளாகத்தில் நடைபெற்ற காய்சின் உச்சநிலை சந்திப்பில் நேற்று தலைமை உரையாற்றினார். சீன ஊடகக் குழுமம் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது. சிங்கப்பூர், பெய்ஜிங் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் நேரடியாகவும் மெய்நிகர் வடிவிலும் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது.
உலகைப் பாதிக்கும் சவால் களைச் சமாளிப்பதில் உலகத் தலைமைத்துவத்துக்கு மாற்று ஏதும் இல்லை என்றபடி திரு ஹெங் தமது உரையைத் தொடங்கினார்.
உலக அளவில் நோய்ப்பரவலைக் கூட்டாகச் சமாளிப்பதில் அரசாங்கங்கள் போதிய அளவில் தலைமைத்துவத்துடன் செயல்படவில்லை என்ற கருத்து நிலவுவதைக் கருத்துக் கணிப்புகள் எடுத்துரைக்கின்றன. இந்தப் போதாமையால் பல நாடுகளில் பொதுச் சுகாதாரமும் சமூகப் பொருளியலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை திரு ஹெங் சுட்டினார்.
வலுவான உலகத் தலைமைத்துவம், உலகமயத்துக்குக் குறைந்துவரும் ஆதரவைப் பெருக்க உதவும் என்றார் அவர்.
புத்தாக்கத்திலும் உற்பத்தியிலும் மேம்பாடுகளை ஏற்படுத்திய சக்திகள், பலர் வேலைகளும் வாழ்வாதாரமும் இழக்கக் காரணமாகி உள்ளன என்றார் அவர்.
"சில ஊழியர்கள் திறனை மேம் படுத்தி புதிய வேலைகளை ஏற்றுக்கொள்ள சிரமப்படுகின்றனர். பல வளர்ச்சி அடைந்த பொருளியல்களில் இடைநிலை சம்பளம் தேங்கியுள்ளது. இதனால் ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது," என்றார் துணைப் பிரதமர்.
உலகமயத்தின் அனுகூலங்களை இன்னும் சமமாகப் பகிர்ந்தளிக்க நாடுகள் பல வழிகளை ஆராய்ந்து வருவதை திரு ஹெங் சுட்டினார். கடந்த மாதம் ஜி20 பொருளியல்களின் தலைவர்கள், 2023க்குள் உலகளாவிய குறைந்தபட்ச வருமான வரியை உருவாக்க இணக்கம் கண்டன.
அரசாங்கங்கள் வசூலிக்கும் வரிகள், எவ்வாறு சமூகத் தேவை களைப் பூர்த்தி செய்ய பயன்படலாம் என்பதற்கு இந்த இணக்கம் உதாரணம் என்றார் அவர்.
ஆனால் இதைச் சிறப்பாகச் செய்ய, அரசாங்கங்கள் நிறுவனங்களை உருமாற்றி, மக்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.