உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவை உள்ளவர்கள், சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்களில், விரைவில், பட்டினி இருந்து ரத்தக் கொழுப்புப் பரிசோதனைக்கு செல்லத் தேவையில்லாமல் போகலாம்.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உயர் ரத்தக் கொழுப்பு ஆகிய நாட்பட்ட நோய் உள்ளவர்கள் காலையில் பட்டினி இருக்கும்போதும் உண்டுவிட்டு பரிசோதனையை மேற்கொள்ளும்போதும் பரிசோதனை முடிவுகளில் பெரிய வேறுபாடு இல்லை என்று ஆய்வு ஒன்று கூறியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பட்டினியிருந்து காலையில் ரத்தக் கொழுப்புப் பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என்பதை ஆய்வு காட்டுகிறது. இதனால், ஒரு நாளில் எந்நேரத்திலும் நோயாளிகள் பரிசோதனைக்குச் செல்லலாம்.
மருந்தகப் பரிசோதனைக் கூடங்களில் நீண்ட வரிசைகளைக் குறைக்க இது உதவும்.
மேலும், பட்டினி இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது, நீர்ச்சத்து குறைவது போன்ற உடல்பாதிப்புகளை இதன்வழி குறைக்க முடியும் என்றார் ஆய்வை மேற்கொண்ட சிங்ஹெல்த் பலதுறை மருந்தக மருத்துவர் டாக்டர் ஈயன் பூன்.
ஆய்வு, கடந்த மார்ச் மாதம் பிரிட்டனில் உள்ள நேச்சர் அறிவியல் சஞ்சிகையில் வெளியானது. சுமார் 470 நோயாளிகளிடம் இதில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.