பிடிஓ வீடுகளை சீரமைக்கும்போது சேரும் குப்பை பற்றி வசிப்போர் கவலை
புதிதாக முடிக்கப்பட்ட தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) திட்டங்களில் வீடுகளை சீரமைக்கும்போது குப்பைகள் குவிவது தவிர்க்க முடியாதது. ஆனால் தீ ஏற்படும் அபாயத்தை அல்லது பூச்சிகள் பெருகுவதைத் தடுக்க அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நான்கு புதிய பிடிஓ குடியிருப்புகளின் குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.
மக்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும், குப்பைகளை அதற்கென ஒதுக்கப்படாத பகுதிகளில் கொட்டக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பிடோக், உட்லண்ட்ஸ், கேன்பரா ஆகிய பிடிஓ குடியிருப்புகளை தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் நேற்று முன்தினம் பார்வையிட்டபோது, குடியிருப்பாளர்கள் இக்கருத்துகளைத் தெரிவித்தனர்.
பிடோக் நார்த் அவென்யூ 1ல் மூன்று அடுக்குமாடிகள் கொண்ட பிடோக் பீக்கன் குடியிருப்பு செப்டம்பரில் நிறைவடைந்த நிலையில், குப்பைகள் கொட்டப்படுவதாக குடியிருப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அங்கு பகலில் சென்றபோது, பல வீடுகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
பயன்படுத்திய அட்டைப் பெட்டிகள், ஸ்டைரோஃபோம் பெட்டிகள் போன்றவை அதிகளவில் குவிந்திருப்பதைக் காண முடிந்தது.
குட்டிக்கரணம் அடித்த இளையர் மீது மேலும் நான்கு குற்றச்சாட்டுகள்
கடந்தாண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் பின்னால் குட்டிக் கரணம் அடித்த 19 வயது இளையர் ரால்ஃப் வீ யீ காய் மீது நேற்று நீதிமன்றத்தில் மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
குறும்பு தொடர்பான மேலும் ஒரு குற்றச்சாட்டு அவற்றில் அடங்கும். இதன்வழி வீ மீது மொத்தம் 10 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
புகையிலை (விளம்பரம், விற்பனைக் கட்டுப்பாடு) சட்டம், தொந்தரவு செய்தல், நாசவேலை, அத்துமீறி நுழைந்தது, விலங்கைத் துன்புறுத்தியது, போதைப்பொருள் உட்கொண்டது ஆகிய குற்றச்சாட்டுகள் அதில் அடங்கும்.
மேலும், சிறுநீர் பரிசோதனைக்குச் செல்லாத காரணத்தால் போதைப்பொருள் தொடர்பான மேலும் சில குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்கக்கூடும்.
வீ, தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 5ஆம் தேதி வீ, நீதிமன்றத்துக்குச் செல்லாததால் அவருக்கு எதிராக கைதாணை பிறப்பிக்கப்பட்டது.
கடந்தாண்டு டிசம்பர் 17ஆம் தேதி, சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் காண்டாமிருகங்களின் வசிப்பிடப் பகுதிக்குள் அவர் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
நினைவுச்சின்னத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு $4,000 அபராதம்
பொதுமக்கள் போர் நினைவுச்சின்னத்தில் வேக்போர்ட் எனும் நீர் சறுக்குப்பலகை விளையாட்டை ஆடி, நினைவுச்சின்னத்தை சேதப்படுத்தியவருக்கு நேற்று நீதிமன்றத்தில் $4,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஸ்டெஃபன் கோவல்கோவ், 25, எனும் சிங்கப்பூரரும் அவரது நான்கு நண்பர்களும் வேக்போர்ட் விளையாட்டை ஆட சிங்கப்பூரில் தனித்துவம் வாய்ந்த இடங்களைத் தேடி வந்தனர்.
சென்ற ஜூலை 17ஆம் தேதி, பொதுமக்கள் போர் நினைவுச்சின்னத்தைச் சுற்றியுள்ள குளத்தில் மோட்டார் உருளை இயந்திரத்தை அமைத்து, அதைக் கொண்டு வேக்போர்ட் நீர்ச்சறுக்காட்டம் ஆடினர். அதன் காணொளி சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.
"மற்றவர்களும் இதேபோல செய்யாதிருக்கவும் நாம் நமது தேசிய நினைவுச்சின்னங்களைப் போற்றிப் பாதுகாக்கவும் தடுத்து நிறுத்துதல் மிகவும் முக்கிய அம்சம்," என்று தண்டனை விதிப்பின்போது நீதிபதி கமலா பொன்னம்பலம் கூறினார்.
கோவல்கோவுடன் இருந்த நான்கு பேரும் நீர்ச்சறுப்பலகை விளையாட்டில் ஈடுபடவில்லை என்று கூறப்பட்டது.

