போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரன் கே. தர்மலிங்கத்துக்கு விளிம்புநிலை அறிவாற்றல் செயல்பாடு உள்ளது என்றும் அவருக்கு அறிவாற்றல் குறைபாடு இல்லை என்றும் உயர்நீதிமன்றம் கண்டுள்ளது என்று சிங்கப்பூர் ஐக்கிய நாட்டு நிறு வனத்திடம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான சிங்கப்பூரின் நிரந்தரப் பிரதிநிதி உமேஜ் பாட்டியா அது குறித்த விளக்கத்தை அளித்தார்.
நாகேந்திரனுக்கு அறிவாற்றல் நடத்தை குறைபாடுகள் உள்ளதால் அவரது மரண தண்டனையை நிரந்தரமாக நிறுத்தி வைக்கும்படி ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் நான்கு சிறப்பு அதிகாரிகள் சிங்கப்பூரைக் கேட்டுக்கொண்டதற்கு பதிலாக அந்த விளக்கம் அமைந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்னர், நாகேந்திரனின் விண்ணப்பத்தின் பேரில் அவரது தண்டனையை மாற்றுவது குறித்த விசாரணை உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
அப்போது உளவியல் கோளாறுக்கான நோய் அறிதல், புள்ளிவிவரக் கையேட்டின்படி நாகேந்திரன் அறிவாற்றல் குறைபாட்டுக்கான தகுதிகளைப் பூர்த்தி செய்கிறாரா என்று நீதிமன்றம் ஆராய்ந்தது.
ஆனால் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் அவருக்கு அறிவாற்றல் குறைபாடு இல்லை என்று உயர்நீதிமன்றம் கண்டறிந்ததை திரு உமேஜ் சுட்டினார்.
அதில் நாகேந்திரனின் சொந்த மனநல மருத்துவர் தந்த சான்று களும் கருத்தில் எடுத்துக்கொள்ளப் பட்டன என்றார் திரு உமேஜ்.