மகளிர்நல மருத்துவராக நடித்து பெண்களை ஏமாற்றி, அவர்களின் அந்தரங்கப் பகுதிகளைப் படமெடுத்து தமக்கு அனுப்பிவைக்கச் சொன்னதாக கூறப்படும் 36 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மற்ற மோசடிச் சம்பவங்களிலும் அவருக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று போலிஸ் நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) கூறியது.
மருத்துவமனை ஒன்றைச் சேர்ந்த மகளிர்நல மருத்துவராக அந்த ஆடவர் நடித்தது குறித்து ஜூலை 24ஆம் தேதி தனக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது.
ஃபேஸ்புக்கில் கணக்கு ஒன்றைத் தொடங்கி, தாம் ஒரு மகளிர்நல மருத்துவர் எனக் கூறிக்கொண்டார் அந்த ஆடவர். மகளிர் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, இயக்கம் ஒன்றில் சேருமாறு பெண் ஒருவருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
மருத்துவ ஆய்வுக்காக எனக் கூறி, அந்தப் பெண்ணின் அந்தரங்கப் பகுதியைப் படமெடுத்து தமக்கு அனுப்பிவைக்குமாறு அந்த ஆடவர் கேட்டுக்கொண்டார்.
அந்த ஆடவரின் அடையாளத்தை உறுதிசெய்து நேற்று முன்தினம் (நவம்பர் 11) அவரை போலிஸ் கைது செய்தது. அவரிடம் இருந்த மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்மீது இன்று (நவம்பர் 13) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

