சிங்கப்பூரின் விமானத் தொழில்துறை, விமானங்களில் இப்போது பயன்படுவதைவிட மேலும் கார்பன் குறைந்த எரிபொருளைப் பயன்படுத்திப் பார்க்கும் முன்னோடித் திட்டத்தை அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தும்.
சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், முதலீட்டு நிறுவனமான தெமாசெக் ஆகியவை கரிமம் குறைந்த எரிபொருளைப் பரிசோதித்துப் பார்க்கும். இந்தப் பரிசோதனை ஓராண்டுக்கு நடக்கும் என்று இந்த ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
கரிமம் குறைந்த எரிபொருளை விநியோகிப்பதற்கான தங்கள் திட்டங்களைத் தாக்கல் செய்யும்படி எரிபொருள் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகிப்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் அது கூறியது.
சாங்கி விமான நிலையத்தில் கரிமம் குறைந்த எரிபொருளைப் பயன்படுத்துவது பற்றியும் அதன் செலவு தாக்குபிடித்து வருமா என்பது பற்றியும் இந்த ஆண்டு தொடக்கத்தில் அரசாங்கமும் விமான தொழில்துறையும் ஓர் ஆய்வை நடத்தின.
அதன் அடிப்படையில் இந்த முன்னோடித் திட்டம் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நாடாளுமன்றத்தில் கரிமம் குறைந்த எரிபொருள் பற்றி கடந்த ஆகஸ்ட்டில் குறிப்பிட்டார்.
அத்தகைய எரிபொருள், கழிவு எண்ணெய் போன்ற வளங்களில் இருந்து தயாரிக்கப்படும். அதைப் பயன்படுத்தினால் 80% வரை கரிம வெளியேற்றம் குறையும். வழக்கமான எரிபொருளைத் தயாரிக்க ஆகும் செலவைவிட 2 முதல் 5 மடங்கு வரை அதற்குச் செலவு அதிகமாக இருக்கக்கூடும் என்று அமைச்சர் தெரிவித்து இருந்தார்.