எஃப்பிடிஏ எனப்படும் ஐந்து சக்திகள் தற்காப்பு ஒப்பந்தத்தைச் சேர்ந்த ஐந்து நாடுகள், அந்த அமைப்பின் பொன்விழாவைக் கொண்டாடுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர். இதன் தொடர்பில் உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள் கடந்த மாதம் சந்தித்தனர்.
புதிய அஞ்சல் தலைகளின் வெளியீடு, 2,600 ராணுவ துருப்பினர்கள் பங்கேற்கும் ராணுவப் பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இணைந்துள்ள இந்த ஒப்பந்தம் 1971ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சிங்கப்பூர் பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியிலிருந்து வெளியேறியபோது சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம். கடற்கொள்ளை மற்றும் பேரிடர் நிர்வாகப் பணிகளுக்கு இந்த அமைப்பு கைகொடுத்திருக்கிறது.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல்களுக்கும் உரசல்களுக்கும் மேடையாக தற்போது விளங்கும் தென்சீனப் பெருங்கடலில் வட்டாரத்திற்கு வெளியிலுள்ள உலக சக்திகளையும் முறைப்படி ஈடுபடுத்தி பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த ஒப்பந்தம், உலக நாடுகளுக்கு இடையே நம்பிக்கையை அதிகரிக்க உதவி செய்வதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நம்பிக்கை வளர்த்தலுக்கு இது உதவும் என்று எஸ் ராஜரத்தினம் அனைத்துலக பள்ளியைச் சேர்ந்த டாக்டர் சாங் ஜுன் யான் தெரிவித்தார்.
ராணுவப் பயிற்சியைத் தொடர்வதுடன் இணையப் பாதுகாப்பு அம்சங்களை படிப்படியாக அறிமுகப்படுத்த சம்பந்தப்பட்ட நாடுகளின் தற்காப்பு அமைச்சர்கள் கடந்த அக்டோபர் மாதம் இணங்கினர்.