பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கத்திலிருந்து சிங்கப்பூர் தப்ப முடியாது. எனவே சிஓபி26 பருவநிலை மாற்ற உச்சநிலைக் கூட்டத்தை சிங்கப்பூர் கவனிக்கவேண்டும் என்று நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்திருக்கிறார்.
ஸ்காட்லந்தில் கிலேஸ்கோவில் ஐக்கிய நாடுகள் பருவநிலை மாநாடுகள் நடத்திய பருவநிலை மாற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பில் சிங்கப்பூர் ஊடகத்தினரிடம் பேசிய திருவாட்டி ஃபூ, இந்த உடன்பாட்டில் இணைந்திருக்கும் சிங்கப்பூருக்குச் சில கடமைகள் இருப்பதாகவும் நாம் நமது பங்கை ஆற்றவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த உடன்பாட்டின்படி, உறுப்பு நாடுகள் 2030க்கான தங்களுக்கு குறிக்கோள்களை மறுஆய்வு செய்து அதனை வலுப்படுத்த வேண்டும். இந்தக் குறிக்கோள்கள், பாரிஸ் உடன்பாட்டிலுள்ள வெப்பநிலை இலக்குடன் ஒத்துப்போகவேண்டும்.
பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, உலக நாடுகள் உலக வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியசுக்குக் கீழே குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக வெப்பம் குறையாமல் மேலே ஏறிக்கொண்டிருந்தால் பருவநிலையில் கடுமையாக தாக்கங்கள் ஏற்படலாம். சூறாவளி, திடீர் மழை போன்ற விளைவுகள் ஆசியாவை பாதிக்கக்கூடும் என்றார் திருவாட்டி ஃபூ.
“உணவு பாதுகாப்பு, உணவு உற்பத்தி மற்றும் குடிநீரை இது பாதிக்கலாம். எனவே பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு சிங்கப்பூருக்குத் தேவைப்படுகிறது. அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுக்க சிங்கப்பூரர்கள் முனைப்புடன் இருக்கவேண்டும்,” என்று அவர் கூறினார்.