நடுக்கடலில் பணியில் ஈடுபடும்போது தங்கள் படகு கவிழ்ந்தால் அதைச் சமாளிக்க கடலோரக் காவல் படை அதிகாரிகளுக்குப் புதிய இயந்திரப் பாவனைக் கருவி வழி பயிற்சி அளிக்கப்படுகிறது.கடலோரக் காவல் படையின் பிரானி முகாமில் உள்ள பத்து மீட்டர் ஆழமுள்ள முக்குளிப்புப் பயிற்சிக் குளத்தில் இந்த இயந்திரப் பாவனைக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
கடலோரக் காவல் படை அதிகாரிகள் உயிர்க்காக்கும் மேலங்கி களை அணிந்திருப்பதால் அவர்கள் வெளியேற முடியாமல் சிரமப்படக்கூடும். கவிழ்ந்த படகுக்குள் இருப்பதால் அவர்கள் நிலைதடுமாறக்கூடும்.
உயிர் தப்பிக்க அவர்கள் உடனடியாக தங்கள் உயிர்காக்கும் மேலங்கிகளைக் கழற்றிவிட்டு பாதுகாப்பான இடத்துக்கு நீந்திச் செல்ல வேண்டும்.
இதற்குத் தேவையான பயிற்சி யை இந்தப் புதிய இயந்திரப் பாவனைக் கருவி அவர்களுக்கு அளிக்கிறது.
தண்ணீருக்கு அடியில் நடத்தப்படும் இந்தப் பாவனைப் பயிற்சி முறை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இயந்திரப் பாவனைக் கருவியில் அதிகபட்சம் ஐவர் ஏறிக்கொள்ளலாம். நடுக்கடலில் படகு கவிழ்வது போல முக்குளிப்புப் பயிற்சிக் குளத்தில் இயந்திரப் பாவனைக் கருவியும் கவிழக்கூடியது. அப்படி அது கவிழும்போது கற்றுத்தரப்பட்ட உத்திகளைப் பயன்படுத்தி அதிகாரிகள் தங்கள் மேலங்கிகளிலிருந்து விடுபட்டு பாதுகாப்பான இடத்துக்கும் நீந்திச் செல்ல வேண்டும்.