பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களிலிருந்து சிங்கப்பூர் தப்பிக்க முடியாது என்பதால் COP26 பருவநிலை உச்சநிலை மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களில் சிங்கப்பூர் கவனம் செலுத்த வேண்டும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.
கிளாஸ்கோவில் நடைபெற்ற ஐநா பருவநிலை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகளின்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து சிங்கப்பூர் ஊடகங்களிடம்
அமைச்சர் ஃபூ பேசினார்.
"மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களின்படி பருவநிலை மாற்றத்துக்கு எதிராக சிங்கப்பூர் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தின்கீழ் செயல்படும் நாடுகளில் சிங்கப்பூரும் இருப்பதால் நாமும் பங்களிக்க வேண்டும்," என்றார் அமைச்சர் ஃபூ.
உதாரணத்துக்கு, ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டிறுதிக்குள் பாரிஸ் ஒப்பந்தத்தின் வெப்பநிலை இலக்குக்கு ஏற்ப, 2030ஆம் ஆண்டுக்கான பருவநிலை இலக்குகளை மறுஆய்வு செய்து அவற்றை வலுப்படுத்துமாறு மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பை இரண்டு டிகிரி செல்சியசுக்குக் கீழ் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் கடுமையான பருவநிலை மாற்றத் தாக்கங்களைத் தவிர்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வெப்பநிலை ஒவ்வொரு டிகிரி அதிகரிக்கும்போது பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் தாக்கங்கள் கடுமையாவதை அவர்கள் சுட்டினர்.
கரிம வெளியேற்றம் 2030ஆம் ஆண்டு வரை தொடர்ந்து அதிகரிப்பதே சிங்கப்பூரின் தற்போதைய இலக்கு.
அதன் பிறகு அது உச்சத்தை அடைந்ததும் குறையத் தொடங்கும்.
இருப்பினும், உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியசுக்குள் வைத்திருக்க வேண்டுமாயின், 2030ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றம் பாதியாகக் குறைய வேண்டும் என்றும் 2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றம் அறவே இருக்கக்கூடாது என்றும் ஐநா பரிந்துரை செய்துள்ளது.
பருவநிலை அபாயகரமான வகையில் மாறுவதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த சிங்கப்பூர் உட்பட கிட்டத்தட்ட 200 நாடுகள் நேற்று முன்தினம் உறுதி அளித்தன.
2015ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தை முழுவீச்சில் நடைமுறைப்படுத்த இது வழிவகுத்துள்ளது. உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியசுக்குள் வைத்திருக்க அரசாங்கங்களுக்கு உதவும் வகையில் விதிமுறைகள் நடைமுறைப்
படுத்தப்படும்.
பருவநிலை மாற்றம் தொடர்பில் தனக்கு இருக்கும் பொறுப்பை சிங்கப்பூர் நன்கு அறிந்திருப்பதாக அமைச்சர் ஃபூ கூறினார்.
பருவநிலை மாற்றம் குறித்த உறுதிமொழியை மறுஆய்வு செய்வதற்கு சிங்கப்பூர் முக்கியத்துவம் கொடுக்கும் என்றார் அவர்.
விதிமுறைக்கு உட்பட்டு சிங்கப்பூர் செயல்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களால் புயல், கனமழை போன்றவற்றால் வட்டார நாடுகள் நிச்சயம் பாதிப்படையும் என்று அமைச்சர் ஃபூ கூறினார்.
இதனால் உணவுப் பாதுகாப்பு, உணவு விநியோகம், தண்ணீர் போன்ற முக்கியமான வாழ்வியல் அம்சங்கள் வெகுவாகப் பாதிப்
படையும் என்றார் அவர்.
அதுமட்டுமல்லாது, நிலச்சொத்துகளையும் பருவநிலை மாற்றம் பாதிக்கும் என்றார் அவர்.
பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் தாக்கங்கள் மோசமடைந்தால் உயிர்ச்சேதமும் நிகழும் என்பதை இதுவரை நிகழ்ந்துள்ள பல சம்பவங்கள் காட்டியிருப்பதாக அவர் கூறினார்.
"பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கத்துக்கு சிங்கப்பூரர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஒன்றிணைந்து செயல்பட சிங்கப்பூரர்களை ஊக்குவிக்க வேண்டும்," என்று அமைச்சர் ஃபூ தெரிவித்தார்.