கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டு, வீட்டிலிருந்தவாறு குணமடையும் சிறுவர்களுக்கு உதவும் வகையில் இலவச கேலிச்சித்திர மின்நூல் ஒன்றை மருத்துவர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
பிரபல சிறுவர் கதைகள் எழுத்தாளரான எமிலி லிம்-லே இந்த நூலைப் புனைந்துள்ளார். நூலில் இடம்பெறும் கேலிச்சித்திரங்களை வரைந்தவர் ஜோசஃப் லீ.
இந்த மின்நூலை, பெற்றோரும் சிறுவர்களைப் பராமரிப்பவர்களும் நேற்று முதல் பதிவிறக்கம் செய்து சிறுவர்களுக்குப் படித்துக்காட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கேலிச்சித்திர மின்நூல், நோய்வாய்ப்பட்டு பத்து நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படும் சிறுவனைப் பற்றிய கதையாகும். அவன் எவ்வாறு குணமடைகிறான் என்பதைப் பற்றி கதை விளக்குகிறது. அதுமட்டுமல்லாது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருக்கும் சிறுமியைப் பற்றிய கதையும் மின்நூலில் இடம்பெறுகிறது.
37 பக்கங்களைக் கொண்ட இந்த மின்நூலை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் மவுண்ட் அல்வேனியா மருத்துவ நிலையத்தில் உள்ள கிண்டர் மருந்தகத்தின் குழந்தை மருத்துவ நிபுணரான டாக்டர் டேரல் லிம்முக்கு உதித்தது.
"covid.gov.sg இணையப்பக்கத்தில் பல முக்கியமான தகவல்கள் உள்ளபோதிலும் சிறுவர்களை ஈர்க்கும் தன்மை அதற்கு அவ்வளவாக இல்லாமல் போகலாம். வீட்டிலிருந்தவாறு குணமடையும் சிறாருக்குத் தைரியமூட்டவும் அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் நாங்கள் விரும்புகிறோம். எனவே, படங்
களுடன் கதையைச் சொன்னால் சிறுவர்களைக் கொண்டுள்ள குடும்பங்களுக்குப் பிடிக்கும் என்று எனக்குத் தோன்றியது. வீட்டிலிருந்து குணமடையும்போது எவற்றையெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பது குறித்து அவர்களுக்கு இக்கதை மூலம் வழிகாட்ட முடியும் என நான் உணர்ந்தேன்," என்று மூன்று சிறு பிள்ளைகளுக்குத் தந்தையான 48 வயது டாக்டர் லிம் தெரிவித்தார்.
கடந்த மாதம் ஏறத்தாழ 45 குழந்தை மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து வீட்டிலிருந்தவாறு குணமடையும் சிறுவர்களுக்கு காணொளி மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கும் தொண்டூழியத் திட்டத்தை டாக்டர் லிம் தொடங்கினார்.
இது மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் வேலைப் பளுவைக் குறைக்க உதவும் என்றும் மருத்துவச் சேவையைப் பெற குடும்பங்கள் காத்திருக்கும் நேரத்தையும் குறைக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தத் தொண்டூழியத் திட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் நாளுக்கு 100லிருந்து 200 சிறுவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
வீட்டிலிருந்தவாறு குணமடையும் முறை குறித்து பெற்றோர் பலருக்குத் தெரியவில்லை என்பது இத்திட்டத்தின் மூலம் தெரியவந்ததாக டாக்டர் லிம் கூறினார். தேவை ஏற்பட்டபோதிலும் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவப்
பரிசோதனை செய்துகொள்ள சில சிறுவர்கள் அஞ்சியதாகவும் அவர் தெரிவித்தார்.
தமது குழந்தை மருத்துவ நிபுணர்கள் குழுவின் பணிகள் சுமூகமான முறையில் நடக்க இந்தப் புதிய மின்நூல் உதவும் என்று டாக்டர் லிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த மின்நூலை சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

