மேலும் 2,304 பேருக்கு கொரோனா; 14 பேர் மரணம்
சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மேலும் 14 பேர் மாண்டனர். மாண்டவர்கள் 61 வயதுக்கும் 94 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களில் 13 பேருக்கு ஏற்கெனவே வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாக சுகாதார அமைச்சு கூறியது. சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 576ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மேலும்
2,304 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. அவர்களில்
2,179 பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குவிடுதிகளில்
120 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த ஐவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்களில் 388 பேர்
60 வயதும் அதற்கும் மேற்பட்டவர்கள்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 235,480ஆக அதிகரித்துள்ளது.
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள
253 நோயாளிகளுக்கு உயிர்வாயுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சீரற்ற உடல்நிலை கொண்டுள்ள
51 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவதாக அமைச்சு கூறியது.
'ஃபைசரின் புதிய மாத்திரை நம்பிக்கையளிக்கிறது'
ஃபைசர் நிறுவனத்தின் புதிய கிருமி எதிர்ப்பு மாத்திரை தொடர்பான ஆரம்பகட்ட தரவு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள கொவிட்-19 நோயாளிகளுக்கு அந்த மாத்திரையைக் கொடுப்பதற்கு முன்பு கூடுதல் தரவுகளுக்காகக் காத்திருப்பதாக அது கூறியது.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக பெரியவர்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியநிலை, மரணம் ஆகியவை நிகழும் சாத்தியத்தை மாத்திரை 89 விழுக்காடு குறைப்பதாக ஆரம்பகட்ட தரவுகள் தெரிவிப்பதாக இம்மாதம் 5ஆம் தேதியன்று ஃபைசர் நிறுவனம் தெரிவித்தது.
அவசரநிலையின்போது இந்த மாத்திரைகளைப் பயன்படுத்த அனுமதி வழங்க அமெரிக்க உணவு, மருந்து ஆணையத்திடம் கூடிய விரைவில் விண்ணப்பம் செய்ய இருப்பதாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்தது.
மாத்திரைக்கு பேக்ஸ்லொவிட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.