ப. பாலசுப்பிரமணியம்
தமது 18வது வயதில் விரும்பித் தொடங்கிய தொழிலைக் கட்டிக்காக்க, கிட்டத்தட்ட கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடி வருகிறார் பா. ரோசினி நாயுடு.
எனினும் தம்மைப் பற்றி மட்டும் யோசிக்காமல், பண்டிகைக் காலத் தில் மற்றவர்களின் தீபாவளியிலும் தித்திப்பு சேர்த்தார் தற்போது 22 வயதிருக்கும் இந்த இளையர்.
சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் அனைத்துலக வர்த்தகத் துறையில் பயிலும்போதே நண்பர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை விரும்பி ஏற்பாடுச் செய்துவந்தார் இவர். ஆர்வத்தைத் தொழிலாக மாற்றிவிடலாம் என்று சிந்தித்தார்.
பிறந்தநாள், ஜோடிகள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளுக்கு 'பிக்னிக்' ஏற்பாடுகள் செய்யும் தொழிலில் 2017ஆம் ஆண்டில் ரோசினி இறங்கினார். இவரது குடும்பத்தில் யாருக்கும் வர்த்தகம் நடத்திய அனுபவம் இல்லை.
$150 முதலீட்டில் நிறுவனம்
உயர்கல்வி மாணவராக $150 முதலீட்டுடன் 'தி மிட் யப் எஸ்ஜி' எனும் நிறுவனத்தை நண்பர்களுடன் தொடங்கிய ரோசினி, இன்று ஓர் அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து நடத்தும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.
அலுவலகக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வது, கண்காட்சி உருவங்களை வடிவமைத்தல், திருமண ஏற்பாடு மற்றும் படப்பிடிப்பு போன்ற சேவைகளை அவரது நிறுவனம் வழங்குகிறது.
டிபிஎஸ் வங்கி, ஹில்டன் சிங்கப்பூர் ஹோட்டல், சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழில் சபை போன்ற அமைப்புகளும் இவரது நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்.
ஆனால் கொவிட்-19 கிருமித்தொற்று கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்தபோது, வர்த்தகம் பாதிப்படைந்தது.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் நிதித் துறை பட்டப்படிப்பை பகுதிநேரமாக மேற்கொண்டு வரும் ரோசினி, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் நிலவரம் மேம்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்.
இத்தருணத்தில் சமூகத்தினருக்கும் நாட்டுக்கு பங்களிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்க, தீபாவளியை முன்னிட்டு 590 இனிப்பு வகை பொட்டலங்களையும் 400 முறுக்குப் பொட்டலங்களையும் இலவசமாக வழங்க முடிவு செய்தார்.
தீபாவளிப் பரிசுகள் விநியோகம்
நவம்பர் 7ஆம் தேதி அன்று, துவாஸ், தாகூர் லேன் ஆகிய பகுதிகளில் உள்ள வா லூன், மெக்கொனெல் டொவெல், சீ ஹப் செங் ஆகிய தங்குவிடுதிகளுக்கு அவரது நிறுவனத்தின் ஊழியர்கள் நேரடியாகச் சென்று பரிசுகளை விநியோகித்தனர்.
அன்று மாலையில் தீபாவளிப் பலகாரங்களை கேம்பல் லேனிலுள்ள பொதுமக்களுக்கு ரோசினியும் அவரது நிறுவன ஊழியர்களும் வழங்கினர்.
கொவிட்-19 குடியேறியவர் ஆதரவு கூட்டணி (Covid-19 Migrant Support Coalition) எனும் தொண்டூழியக் குழு இவர்களது முயற்சிக்கு ஆதரவு தந்தது.
தங்குவிடுதிகளை அணுகி அங்குச் செல்ல ரோசினிக்கு அனுமதி வாங்கித் தந்தது இக்குழு. இத்துடன் குழு நிற்கவில்லை.
"அந்நாளியில் 12 வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 1,379 சைவ உணவு பெண்டோ பொட்டலங்களை வழங்க எங்களது தொண்டூழியர்கள் உதவினர். வழக்கமாக தீபாவளி நேரத்தில் சிராங்கூன் சாலைக்கு இந்திய ஊழியர்கள் செல்வார்கள். அங்கு உணவு உண்ணும் திருப்தியை அவர்களுக்கு அளிக்க முயன்றோம்," என்றார் கொவிட்-19 குடியேறியவர் ஆதரவுக் கூட்டணியின் தொண்டூழியரும் கப்பல் துறை திட்ட நிர்வாகியுமான திரு கணேஷ் காசிநாத், 43.
"இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, முழுநேரமாக தொழிலில் கவனம் செலுத்தவுள்ளேன். மற்றவர்களுக்கு வழங்கும் இந்த முதல் முயற்சியில் நல்ல ஆதரவு கிடைத்திருக்கிறது. எதிர்காலத்தில் மற்ற பண்டிகைகளின்போதும் இதுபோன்ற சமூகநல முயற்சிகளில் ஈடுபட விரும்புகிறோம்," என்று கூறினார் வளர்ந்துவரும் தொழில்முனைவர் ரோசினி.