கொண்டாட்டமாக இருந்திருக்க வேண்டிய ஓர் இரவு, ஜூரோங் வெஸ்ட் ஸ்த்ரீட் 24 புளோக் 271சியில் உள்ள தங்கள் அடுக்குமாடி வீடு தீப்பிடித்துக்கொண்டதால் ஒரு குடும்பத்துக்குத் திண்டாட்டமாக அமைந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மகளின் திருமண நிகழ்வில் இருந்தனர் அறுபது வயது மதிக்கத்தக்க அந்தத் தம்பதி. அந்த நேரத்தில் பத்தாவது மாடியில் உள்ள வீட்டில் தீ ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு இரவு 11.55 மணி அளவில் தகவல் கிடைத்தது.
வரவேற்பு அறையில் தீ மூண்டதாகவும் கதவை வலுக்கட்டாயமாகத் திறந்து வீட்டிற்குள் நுழைய வேண்டியிருந்ததாகவும் குடிமைத் தற்காப்புப் படையினர் கூறினர்.
அவர்கள் வருவதற்கு முன்னர் சுமார் 80 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர்.
தீச்சம்பவத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.