தங்குவிடுதிகளில் வசிக்கும், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் டிசம்பர் 3 முதல் பொது இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நாள் ஒன்றுக்கு 3,000 வரையிலான ஊழியர்கள் அவ்வாறு அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாரத்திற்கு 21,000 ஊழியர்கள் பொது இடங்களுக்குச் செல்லலாம். தற்போது அந்த எண்ணிக்கை வாரத்திற்கு 3,000ஆக உள்ளது.
மேலும், லிட்டில் இந்தியா அல்லது கேலாங் சிராய் போன்ற பகுதிகளுக்குச் செல்ல இனி அவர்களுக்குக் கட்டுப்பாடு இல்லை. எங்கு செல்லவேண்டும் என்பதை அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
அத்துடன், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் பொழுதுபோக்கு நிலையங்களுக்கு இனி தினமும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தற்போது வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே செல்ல அவர்களுக்கு அனுமதி உண்டு.
அதற்கு வசதியாக தற்போது நான்கு மணி நேரமாக உள்ள பொழுதுபோக்கு நிலையங்களின் வேலை நேரம் இனி எட்டு மணி நேரமாக நீட்டிக்கப்படும்.
தீவு முழுவதும் எட்டு பொழுதுபோக்கு நிலையங்கள் உள்ளன. தற்போது அந்த ஊழியர்கள் குறிப்பிட்ட நிலையங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து அவர்கள் எட்டு பொழுதுபோக்கு நிலையங்களுக்கும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங், கொவிட்-19க்கான அமைச்சுகள் நிலை பணிக்குழு நேற்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தங்குவிடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான நடமாட்டக் கட்டுப்பாடு கடைசியாக அக்டோபர் 30ஆம் தேதி சிறிது விலக்கப்பட்டது. வாரம் ஒன்றுக்கு பொது இடங்களில் அனுமதிக்கப்படும் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்களின் எண்ணிக்கை அப்போது 500லிருந்து 3,00ஆக அதிகரிக்கப்பட்டது.
செப்டம்பரில் தொடங்கப்பட்ட சமூக வருகைக்கான முன்னோடித் திட்டத்திற்கு வெளிநாட்டு ஊழியர்
களிடையே நல்ல வரவேற்பு இருந்ததாக டாக்டர் டான் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு சமூக வருகையில் பங்கேற்றவர்களிடம் இதுவரை தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை என்றார் அவர்.
தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களில் 98 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும் கூடுதல் தடுப்பூசிக்குத் தகுதிபெற்றோரில் 81 விழுக்காட்டினர் அதனைப் போட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போது முதல் 2022 ஜனவரி வரை முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்களில் 61 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுப்பூசிக்குத் தகுதிபெறுவர்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோர் டிசம்பர் 3 முதல் பொது இடங்களுக்குச் செல்லலாம்

