ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்குரிய கொவிட்-19 தடுப்பூசி தொடர்பாக ஃபைசர் நிறுவனத்துடன் புதிய விநியோக உடன்பாடு ஒன்றில் சிங்கப்பூர் கையெழுத்திட்டு உள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியை விநியோகம் செய்வதும் அந்த உடன்பாட்டில் அடங்கும் என்று கூறிய அவர், இதனை கூடிய விரைவில் நிறைவேற்றுவது குறித்து ஃபைசர் நிறுவனத்துடன் இடை
விடாத தொடர்பில் சுகாதார அமைச்சு இருந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு மாறுபட்ட உருவாக்கம் தேவைப்படுவதாக சிங்கப்பூரின் மருத்துவ சேவை இயக்குநர் கென்னத் மாக் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
பெரியவர்களுக்கான தடுப்பூசியில் பயன்படுத்தப்படும் எம்ஆர்என்ஏ மூலப்பொருள் பயன்படுத்தப்பட்டாலும் மாறுபட்ட கலவை அதற்குத் தேவைப்படும்.
அதனைச் சேமித்து வைக்க அதிக குளிரூட்டி வசதிகள் தேவைப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் தடுப்பூசி குப்பிக்குத் தேவைப்படும் மருந்தை எளிதாக எடுக்க முடியும்.
குழந்தைகளுக்கான தடுப்பூசி தொடர்பாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது முதல் அதன் மீது பெற்றோர்கள் அதிக ஆர்வத்துடன் இருப்பதாக திரு ஓங் தெரிவித்தார்.
இந்தத் தடுப்பூசி தொடர்பில் ஃபைசர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளலாமா என்பது பற்றி கொவிட்-19 தடுப்பூசிக்கான நிபுணர் குழு நவம்பர் இரண்டாவது வாரத்தில் பரிந்துரை செய்யும் என அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகம் அண்மையில் குழந்தை தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது.