சிங்கப்பூரில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் கொவிட்-19 நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத முதியோராகவே இருக்கின்றனர்.மரணங்களும் இனிமேல்தான் குறையவேண்டும் என சிங்கப்பூரின் மருத்துவ சேவைத் துறை இயக்குநர் கென்னத் மாக் தெரிவித்தார்.
இருந்தாலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை சற்று குறைந்திருப்பது நல்ல செய்தி என்றார் அவர்.
இந்த எண்ணிக்கை தொடர்ந்து குறையுமானால் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களில் மேலும் பலருக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் என்று நேற்று நடந்த கொவிட்-19 செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார். மருத்துவமனைகளில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 1,525 கொவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 52 பேர் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தனர். 69 பேரின் நிலைமை மோசமாக இருந்தது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், தீவிர சிகிச்சைப் பிரிவின் பயனீட்டு விகிதம் 63.3% ஆகக் குறைந்துள்ளது. இது சனிக்கிழமை 66.3% ஆக இருந் தது. ஒரு வாரத்திற்கு முன் ஏறக்குறைய 70% ஆக இது இருந்தது என சுகாதார அமைச்சின் புள்ளிவிவரம் கூறுகிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் 70க்கும் அதிக வயதுள்ள கொவிட்-19 நோயாளிகளைப் பொறுத்த வரை, ஏழு நாள் சராசரி விகிதாசாரம், முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 100,000 பேருக்கு 45.8 ஆக இருந்தது. அது தடுப்பூசி போட்டுக்கொண்ட 100,000 பேருக்கு 6.4 ஆக இருந்தது. இந்த வயதுப் பிரிவினரில் மரண விகிதம் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 100,000 பேருக்கு 13.7 ஆகவும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட 100,000 பேருக்கு 1.6 ஆகவும் இருந்தது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையும் இதர நோயாளிகளின் எண்ணிக்கையும் கொஞ்சம் குறைந்து இருக்கிறது என்று பேராசிரியர் மாக் தெரிவித்தார்.

