உயர் நீதிமன்ற நீதிபதி சான் செங் ஒன் அடுத்த ஆண்டு ஜனவரியில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக நியமனம் பெறுவார் என்று பிரதமர் அலுவலகம் நேற்று அறிவித்தது. அதேபோல சிங்கப்பூர் அனைத்துலக வர்த்தக நீதிமன்றத்தின் அனைத்துலக நீதிபதியாக ஜப்பானைச் சேர்ந்த யுகோ மியாஸகி 2022 ஜனவரி 5 முதல் 2024 ஜனவரி 4 வரை இருப்பார்.
இன்னோர் அனைத்துலக நீதிபதியாக அமெரிக்க நீதிபதி கிறிஸ்டஃபர் ஸ்காட் சோன்ட்சி 2022 ஜுலை 4 முதல் 2024 ஜனவரி 4 வரை பதவியில் இருப்பார். இந்த நியமனங்களை அதிபர் செய்திருப்பதாக பிரதமர் அலுவலக அறிக்கை கூறியது.
இவர்கள் தவிர இரண்டு நீதிபதிகளின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதாகவும் மேலும் இரண்டு மூத்த நீதிபதிகள் மறுநியமனம் செய்யப்பட இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூரின் முதல் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஒரே பெண் நீதிபதியாக இருக்கும் ஜுடித் பிரகாஷின் தற்போதைய பதவிக்காலம் டிசம்பர் 18ஆம் தேதி முடிவுற்ற பின்னர் மேலும் ஈராண்டுகளுக்கு பதவி நீட்டிப்புப் பெறுவார்.
அதேபோல, மேல்முறையீட்டுப் பிரிவின் நீதிபதியாக இருக்கும் ஊ பி லியின் பதவிக்காலம் டிசம்பர் 30ஆம் தேதி முடிவுற்ற பின்னர் மேலும் மூன்றாண்டு காலத்திற்கு அவரது பதவி நீட்டிக்கப்படும். மூத்த நீதிபதியாக மறுநியமனம் பெறும் இருவர் நீதிபதி ஆண்ட்ரு ஆங் மற்றும் நீதிபதி லாய் சியு சியு. இவர்
களின் புதிய பதவிக்காலம் 2022 ஜனவரி 5 முதல் தொடங்கும்.
புதிய நியமனங்களைச் சேர்த்து உச்ச நீதிமன்றம் 28 நீதிபதிகளைப் பெற்றிருக்கும். தலைமை நீதிபதி, 4 மேல்முறையீட்டு நீதிபதிகள் ஆகியோர் அந்த எண்ணிக்கையில் அடங்குவர்.
உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக அமரவிருக்கும் நீதிபதி சான், 67, ஓய்வுபெற இருந்த நிலையில் 2019 ஜனவரி 4 முதல் ஈராண்டுகளுக்கு அவர் பதவி நீட்டிப்புப் பெற்றார்.
2021 ஜனவரி 4ல் மேலும் ஓராண்டுக்கு அவரது பதவி நீட்டிக்கப்பட்டது.
(இடமிருந்து) அனைத்துலக நீதிபதி களாக நியமிக்கப்பட்டுள்ள யுகோ மியாஸகி, கிறிஸ்டஃபர் ஸ்டாக் சோன்ட்சி. படங்கள்: உச்ச நீதிமன்றம்