இரைப்பை புற்றுநோயை ஏற்படுத்தும் உயிரணுக்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளும் ஒரு திட்ட வடிவை சிங்கப்பூர் அறிவியல் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
புற்றுநோய்க்கு காரணமான உயிரணுக்கள் உடலுக்குள் எவ்வாறு பரவுகிறது என்பதை இந்த வரைபடம் விளக்குகிறது.
குறிப்பிட்ட மூலக்கூறு பாதைகள், புற்றுநோய் தீவிரமாவதற்கு காரணமாக இருப்பதையும் வரைபடம் காட்டுகிறது.
இதன்மூலம் சிறந்த சிகிச்சை வாய்ப்புகளுக்கு வழி ஏற்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக புற்றுநோய் சிகிச்சை நிலையத்தின் ரத்தப் புற்றுநோய்ப் பிரிவின் மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் ராகவ் சுந்தர் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் சாலைகளை உதாரணமாக வைத்து புற்றுநோய் உயிரணுக்கள் பரவும் விதத்தை அவர் விளக்கினார்.
புற்றுநோய் உயிரணுக்கள், வீட்டிலிருந்து விமான நிலையத்திற்குச் செல்ல விரும்புவதாக வைத்துக் கொண்டால் விரைவுச் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்த மருந்துகள் இருக்கின்றன. இருந்தாலும் எங்கள் பகுப்பாய்வின் மூலம் புற்றுநோய் உயிரணுக்கள் இதர சிறிய சாலைகள் வழியாக இலக்கை அடைவதை அடையாளம் கண்டுபிடித்து உள்ளோம்," என்று டாக்டர் சுந்தர் சொன்னார்.
வயிற்றின் மேற்பரப்பில் உயிரணுக்களில் ஏற்படும் மரபணு மாற்றம் காரணமாக இரைப்பைப் புற்று நோய் ஏற்பட்டாலும் புற்றுநோய் உயிரணுக்களுக்கும் அவற்றைச் சுற்றியுள்ள உயிரணுக்களுக்கும் புற்றுநோயை பெருக்குவதற்கான தொடர்புகளை கவனிப்பது அவசியம்.
உதாரணமாக, சில வகையான இரைப்பைக் கட்டிகளில் நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் கலந்துள்ளன. குறிப்பாக 'பி' உயிரணுக்கள் நோய் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துகின்றன. புற்றுநோய் உயிரணுக் களுக்கும் இந்த 'பி' உயிரணுக்களுக்கும் இடையிலான குறிப்பிட்ட தொடர்பு 'பி' உயிரணுக்கள் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுவதைத் தடுக்கிறது என்று திரு சுந்தர் மேலும் கூறினார்.
இந்த ஆய்வை டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளி, அறிவியல் தொழில்நுட்ப முகவை, சிங்கப்பூர் மரபணு ஆய்வுக்கழகம் ஆகியவை கூட்டாக மேற்கொண்டன. தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பு. இதர மருத்துவ நிலையங்களின் ஒத்துழைப்புடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அக்டோபர் 7ஆம் தேதி 'கேன்சர் டிஸ்கவரி' எனும் சஞ்சிகை யில் ஆய்வின் முடிவுகள் வெளி யிடப்பட்டது.