'ரெட்டோர்ஸ்' (RedDoorz) எனும் ஓட்டல் அறைகளுக்குப் பதிந்துகொள்ளும் இணையத்தளத்தின் கிட்டத்தட்ட 5.9 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் சிங்கப்பூரர்களும் தென் கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய தகவல் கசிவு என்று அரசாங்கம் இதை வருணித்துள்ளது.
இணையத்தளத்தை நடத்தும் 'கொம்மெஷர்' (Commeasure) எனும் உள்ளூர் நிறுவனத்துக்கு தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணை யம் $74,000 அபராதம் விதித்துள்ளது.
இது, 2018ஆம் ஆண்டு நடந்த தகவல் கசிவுக்காக சிங்ஹெல்த் நிறுவனத்துக்கும் 'இன்டகிரேட்டட் ஹெல்த் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ்' நிறுவனத்துக்கும் ஒருசேர விதிக்கப்பட்ட $1 மில்லியன் அபராதத்தைவிட இது மிகக் குறைவான தொகையாகும்.
கொவிட்-19 நோய்ப் பரவலால் விருந்தோம்பல் துறைக்கு ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பைக் கருத்தில் எடுத்துக்கொண்டு அபராதத்தைத் தீர்மானித்ததாக ஆணையம் கூறியது. ஆணையம் அதன் முடிவைக் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது.
தனிப்பட்ட தகவல் பாதுகாப்புச் சட்டம் நடப்புக்கு வந்ததிலிருந்து ஏற்பட்டுள்ள ஆகப் பெரிய தகவல் கசிவு இது என்று ஆணையம் கூறியது.
கடந்த 2013ஆம் ஆண்டு நடப்புக்கு வந்த சட்டத்தின் கீழ், இணையத்தில் தகவல் கசிவுக்காக ஒரு நிறுவனத்துக்கு அதிகபட்சமாக ஒரு மில்லியன் அபராதம் விதிக்கலாம். ஆனால் அடுத்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து இந்த அபராதத் தொகை உயர்த்தப்படும்.
நிறுவனங்களின் ஆண்டு வருமானத்தில் 10% வரையிலான தொகை அல்லது ஒரு மில்லியன் வெள்ளி ஆகிய இரண்டிலும் அதிகமானது அபராதமாக விதிக்கப்படலாம்.
கொம்மெஷர்ஸ் தகவல் கசிவில் வாடிக்கையாளரின் பெயர், தொடர்பு விவரங்கள், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, ரெட்டோர்ஸ் கணக்குக்குள் நுழைவதற்கான மறைச்சொல், ஓட்டலறைப் பதிவுகள் குறித்த தகவல்கள் ஆகியவை களவாடப்பட்டன.
வாடிக்கையாளர்களின் மறைச்சொற்கள் குறியீடாக மாற்றப்பட்டவை. அவற்றை மீண்டும் மாற்ற வழி கண்டால் ஒழிய, களவாடியவர்களால் அந்தத் தகவல்களைப் பயன்படுத்தமுடியாது என்று கூறப்பட்டது.
தகவல்களைக் களவாடியவர்கள், வாடிக்கையாளர்களின் கடன் அட்டை எண்களைப் பெறவில்லை.
ஆனால் மற்ற தனிப்பட்ட தகவல்கள் களவாடப்பட்டதால் பாதிகப்பட்டவர்களைப்போல நடித்து, அவர்களின் மற்ற இணையக் கணக்குகளைக் கைப்பற்ற களவாடியவர்கள் முயற்சி செய்யக்கூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கடந்தாண்டு செப்டம்பரில் ரெட்டோர்ஸின் தகவல்கள் களவாடப்பட்டன. அவை ஊடுருவல்காரர் களுக்கான இணையத்தளத்தில் விற்பனைக்கு விடப்பட்டன. பின்னர் அத்தகவல்கள் இணையத்தி லிருந்து நீக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் இந்தோனீசியர்கள் என்றும் சுமார் 9,000 பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் என்றும் ரெட்டோர்ஸ் நிறு வனம் கூறியது.

