போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக மலேசியாவைச் சேர்ந்த துப்புரவு மேற்பார்வையாளருக்குத் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹார்பர்ஃபிரண்ட் அவென்யூவில் நிறுத்திவைக்கப்பட்ட அவரது மோட்டார்சைக்கிளில் ஒரு பையில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
முனுசாமி ராமமூர்த்தி, சுமார் 6.3 கிலோகிராம் தூளை வைத்திருந்ததாகவும் ஆய்வுக்குப் பிறகு அதில் 57.54 கிராம் போதைமிகு அபின் இருந்ததாகவும் கண்டறியப்பட்டது. இக்குற்றத்துக்காக முனுசாமிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
பதினைந்து கிராமுக்கும் அதிகமாக போதைமிகு அபின் கடத்தப்பட் டால், அதற்குத் தூக்குதண்டனை விதிக்க சட்டத்தில் இடமுண்டு.
முனுசாமிக்கு தண்டனை விதித்த காரணத்தை விளக்கிய 42 பக்க அறிக்கையை, நீதிபதி ஆட்ரி லிம் நேற்று எழுத்துபூர்வமாக வழங்கினார். பையில் களவாடப்பட்ட கைபேசிகள் இருந்ததாக முனுசாமி முன்வைத்த வாதத்தைத் தாம் நம்பவில்லை என்றார் அவர்.
மேலும், அந்தப் பையைத் தற்காலிகமாக தமது மோட்டார்சைக்கிளின் பின்னால் உள்ள பெட்டியில் வைக்க, தமது சகநாட்டவரான சரணவன் என்பவரை அனுமதித்ததாக முனுசாமி கூறியதும் நம்பும்படி இல்லை என்றார் அவர்.
'போய்' எனும் வேறொரு நபர் சற்று நேரத்தில் அப்பையை எடுத்து விடுவார் என்று எண்ணத்தில் தாம் அதற்கு ஒப்புக்கொண்டதாக முனுசாமி கூறியிருந்தார். அதையும் நீதிபதி நிராகரித்தார்.
அத்துடன், வழக்குவிசாரணையின் போது சாட்சியம் அளித்துக்கொண்டிருந்த ஒருவருக்குக் கருத்துகளை எடுத்துக் கொடுத்ததாகக் கூறி, விசாரணை அதிகாரி டெரெக் வோங்கை நீதிபதி கண்டித்தார்.
சார்ஜண்ட் முகமது நஸ்ருல்ஹாக் என்பவரிடம் அதிகாரி வோங் இரண்டு முறை சமிக்ஞை செய்தார்.
அவரது செயலால் முனுசாமியின் வழக்கில் பாரபட்சம் ஏதும் ஏற்படவில்லை என்றபோதும் மற்ற சம்பவங்களில் அவ்வாறு நிகழக்கூடும் என்றார் அவர்.
சிங்கப்பூரில் 14 ஆண்டுகளாகப் பணியாற்றிய முனுசாமி, ஹார்பர்ஃபிரண்ட் செண்டர் டவர் 2இல் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி கைதானார்.
மத்திய போதைப் பொருள் பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்தபோது மற்ற இரண்டு பேர் பற்றி ஏதும் கூறவில்லை என்றும் வழக்கு விசாரணையின்போதுதான் அது பற்றி முனுசாமி கூறினார் என்றும் நீதிபதி லிம் தமது அறிக்கையில் சுட்டினார்.