'தி ராயன் ஃபெளண்டேஷன்' எனும் லாபநோக்கமற்ற கலைத்துறை அமைப்பு, 'காவ்ஸ்:ஹாலிடே' எனும் பொம்மைக் கண்காட்சியில் தொடர்புடைய பல்வேறு தரப்பு களுக்கு எதிராக நீதிமன்ற அவ மதிப்பு வழக்கைத் தொடுத்துள்ளது. கண்காட்சியையும்
அதன் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளையும் நிறுத்தவேண்டும் என்ற நீதிமன்ற ஆணையின்படி அந்தத் தரப்புகள் நடக்கவில்லை என்று அதற்குக் காரணம் கூறப்பட்டது.
அதன் தொடர்பில் தி ராயன் ஃபெளண்டேஷன் நேற்று முன் தினம் மாலை உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தது.
கண்காட்சியின் ஏற்பாட்டாளர் ஆல்ரைட்ஸ்ரிசர்வ்ட் (AllRightsReserved), அதன் நிறுவனர், கண்காட்சிக்கான தொடர்பு நிறுவனத்தின் நிறுவனர்கள், அதில் பணியாற்றிய பாதுகாவல் நிறுவனம் ஆகிய தரப்புகளின் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியை நிறுத்தும் நீதிமன்ற ஆணையை ஆல்ரைட்ஸ்ரிசர்வ்ட் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவரிடம் கடந்த சனிக்கிழமை வழங்கியதாக அமைப்பு கூறியது.
சமூக ஊடகத்தில் செல்வாக்குள்ள பிரபலங்களுக்குச் சிறப்பு முன்னோட்டக் காட்சி தொடங்கும் பத்து நிமிடத்துக்கு முன்னர் நீதிமன்ற ஆணை வழங்கப்பட்டதாக அமைப்பு கூறியது.
ஆனால் ஆல்ரைட்ஸ்ரிசர்வ்ட் அந்த முன்னோட்டக் காட்சியைத் தொடர்ந்து நடத்தியது. அந்நிறு வனம் நீதிமன்ற உத்தரவை அலட்சியப் படுத்தியதாக தி ராயன் ஃபெளண்டேஷன் தனது அறிக்கையில் தெரிவித்தது.
காவ்ஸ் எனும் புகழ்பெற்ற அமெரிக்க ஓவியர் உருவாக்கிய 42 மீட்டர் நீளமுள்ள பொம்மையை சிங்கப்பூரில் காட்சிக்கு வைக்கத் திட்டமிடப்பட்டது.
ஆனால் தி ராயன் ஃபெளண்டேஷன், கண்காட்சி ஏற்பாட்டாளர் தமது அறிவுசார் சொத்தை அத்து மீறி பயன்படுத்தியதாகவும் நம்பிக்கை மோசடி செய்தததாகவும் கூறி அதன் மீது வழக்கு தொடுத்தது.
கண்காட்சியை நடத்துவதன் தொடர்பில் ஆல்ரைட்ஸ்ரிசர்வ்ட் நிறுவனத்துடன் தி ராயன் ஃபெளண்டேஷன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவை தோல்வியுற்றன.
கண்காட்சிக்கு ஆதரவு தந்த சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் பொம்மையை உருவாக்கிய கலைஞரான காவ்ஸும் வழக்கில் பெயர் குறிப்பிடப்படவில்லை.

