இதுநாள் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) ‘போயிங் 737-8’ ரக விமானங்கள், மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் பறக்கவிருக்கின்றன.
பயணிகளுக்கு பயணக் களைப்பு தெரியாத அளவுக்கு புதிய அனுபவத்தைத் தரும் வகையில் விமானத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கால்களை நீட்டிக்கொள்ள வசதியாக வடிவமைக்கப்பட்ட இருக்கைகள், பொழுதுபோக்குத் திரைகள், புதுப்பிக்கப்பட்ட அறைகள் ஆகியவை செய்யப்பட்ட மாற்றங்களில் சில.
வர்த்தகப் பிரிவில் பயணம் செய்யும் பயணிகள், தங்களுடைய இருக்கைகளைப் படுக்கையாக விரித்துக்கொள்ள முடியும். இதனால் சாய்வான இருக்கையில் சாய்ந்திருக்க வேண்டிய அவதி இருக்காது.
போயிங் 737-8 விமானங்கள் முன்பு சில்க்ஏர் நிறுவனத்தின்கீழ் செயல்பட்டன.
எஸ்ஐஏவுடன் சில்க்ஏர் நிறுவனம் ஒருங்கிணைப்படுவதாக இவ்வாண்டின் முற்பகுதியில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வரும் வாரங்களில் குறுகிய, நீண்டதூர விமானச் சேவைகள் படிப்படியாகத் தொடங்கப்படும் என்று எஸ்ஐஏ அறிவித்துள்ளது.
புருணை, கம்போடியா, இந்தோனீசியா, மலேசியா, மாலத்தீவுகள், நேப்பாளம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு விமானச் சேவைகள் தொடங்கப்படும் என்று அது தெரிவித்தது.
அதே சமயத்தில், அந்தந்த நாடுகளின் விதிமுறைகளைப் பொறுத்து விமானச் சேவைகள் அமையும் என்று எஸ்ஐஏ குறிப்பிட்டது.