நான்கு மாடி உயரத்திலிருந்து விழுந்து இந்திய ஊழியர் மரணம்

நான்கு மாடி உயரத்திலிருந்து விழுந்து இந்திய ஊழியர் மரணம்

1 mins read
3f821578-2273-43a6-943a-48ab96726232
இந்திய நாட்டவரான அந்த 35 வயது ஊழியர், 'சக்சஸ் எஞ்சினியரிங் அண்ட் ஸ்டீல்' நிறுவனத்தைச் சேர்ந்தவர். படம்: சக்சஸ் எஞ்சினியரிங் அண்ட் ஸ்டீல்/ஃபேஸ்புக் -

பூன்லேயில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் நான்கு மாடி உயரத்திலிருந்து நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 15) கீழே விழுந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

எண் 22 சின் பீ சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

இந்திய நாட்டவரான அந்த 35 வயது ஊழியர், 'சக்சஸ் எஞ்சினியரிங் அண்ட் ஸ்டீல்' நிறுவனத்தைச் சேர்ந்தவர்.

அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் அவர் வேலை செய்துகொண்டிருந்தார். அந்தக் கட்டடத்தின் நான்காவது தளத்திலிருந்து 'பூம் லிஃப்ட்' இயந்திரத்தில் அவர் ஏற முற்பட்டபோது, நழுவிக் கீழே விழுந்தார்.

இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், காயங்கள் காரணமாக அங்கு உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தான் விசாரணை நடத்தி வருவதாக மனிதவள அமைச்சு கூறியது. அந்தக் கட்டுமானத் தளத்தில் வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
உயிரிழப்பு