சிங்கப்பூர், இந்தோனீசிய வெளி யுறவு அமைச்சர்கள், இரு தரப்பு பயண ஏற்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே 'விடிஎல்' எனும் தடுப்பூசி போட்டவர்களுக்கான பாதை விரை வில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் நவம்பர் 29ஆம் தேதி யிலிருந்து தனிமைக் கட்டுப்பாடு இல்லாமல் இந்தோனீசியப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என சிங்கப்பூர் அறிவித்த மறுநாளே புதிய ஏற்பாடு குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்துள்ளனர்.
இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடி நேற்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனிடம் பேசினார். அப்போது இருதரப்பு ஒத்துழைப்புப் பற்றி முக்கியமாகப் பேசப்பட்டது. குறிப்பாக 'விடிஎல்' பயண ஏற்பாடு பற்றிய விவாதங்களைத் தொடர இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர் என்று இந்தோனீசிய வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
இந்தோனீசியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லா பயணத்துக்கு சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளது. இதனை எப்படிச் செயல்படுத்துவது என்பதையும் அமைச்சர்கள் ஆலோசித்தனர். சில குறிப்பிட்ட வரம்புகளுடன் இந்தோனீசியாவுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் திரு ரெட்னோவிடம் தெரிவித்து உள்ளார்.
விதிமுறை அமலாக்கல் கட்டமைப்பில் உள்ள நம்பிக்கை, இந்தோனீசியாவின் கொவிட்-19 சூழல், தடுப்பூசி போட்டோரின் விகிதம் போன்றவை சிறப்புப் பயண ஏற் பாட்டுக்கு முக்கியம் என்று அமைச்சர் விவியன் வலியுறுத்தியுள்ளதாக அறிக்கை குறிப்பிட்டது.