சிங்கப்பூரர் பலருக்கு வீடாகவும் பிரபல சுற்றுலாத் தளமாகவும் இருக்கும் பெர்த் நகருக்குச் செல்ல பயணிகள் இனி திட்டமிடலாம்.
'ஜெட்ஸ்டார் ஏசியா' சிங்கப்பூருக்கும் பெர்த்துக்கும் இைடயே பிப்ரவரி 12ஆம் தேதியிலிருந்து விமானச் சேவையை தொடங்குகிறது.
அந்தக் காலகட்டத்தில் தடுப்பூசி பயணத் தடத்தின் (விடிஎல்) கீழ் தனிமையில் தங்கவேண்டிய அவசியமில்லாமல் பயணிகள் இரு வழிப் பயணத்தை மேற்கொள்ள முடியும். 'விடிஎல்' பயணத்திற்கு அனுமதி கிடைத்ததும் சிங்கப்பூர்-பெர்த் தடத்தில் வாரத்திற்கு நான்கு சேவைகள் வழங்கப்படும் என்று ஆஸ்திரேலியாவின் குவான்டாஸ் விமான நிறுவனத்தின் மலிவுக் கட்டண விமானமான ஜெட்ஸ்டார் நேற்று தெரிவித்தது. தற்போது நவம்பர் 21ஆம் தேதியிலிருந்து சிட்னி, மெல்பர்ன் நகரங் களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போட்ட சிங்கப்பூரர்களுக்கு தனிமைப் படுத்தல் தேவையில்லாத இரு வழிப் பயணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள், ஊழியர்கள், மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் இல்லாமல் அனுமதிக்கப்படுவர் என்று கடந்த மாதம் 31ஆம் தேதி ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்தன. மேலும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆஸ்திரேலிய பயணிகளும் நவம்பர் 8ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரில் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வீட்டுத் தனிமை தேவையில்லை.