கடந்த வாரம் கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட ஐந்து சிங்கங்கள் உடல்நலம் தேறி வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
தொற்றிலிருந்து குணமடைந்து வரும் அவற்றின் பராமரிப்பாளர் களிடம் இலேசான அறிகுறிகளே தென்பட்டன. சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்திலும் நைட் சஃபாரியிலும் வசிக்கும் அந்தச் சிங்கங்கள், தத்தம் குகைகளில் குணமடைந்து வருகின்றன. பொதுமக்களின் பார்வையில் அவை தென்பட மாட்டா.
நைட் சஃபாரியில் வசிக்கும் சிங்கங்கள் தெளிவாகவும் சுறு சுறுப்போடு இருப்பதாகவும் அமைச்சர் ஓங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டார்.
அவற்றுக்கு வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து உணவு வழங்கப் படுவதாகவும் அவை நன்கு சாப்பிடுவதாகவும் திரு ஓங் கூறினார்.
கடந்த வாரம், நைட் சஃபாரியில் நான்கு 'ஏஷியாட்டிக்' சிங்கங்களுக்கும் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் ஓர் ஆப்பிரிக்க சிங்கத்துக்கும் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
மண்டாய் வனவிலங்கு குழுமத்தைச் சேர்ந்த ஊழியர்களுடன் அந்தச் சிங்கங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தன. அந்த ஊழியர்களைக் கிருமி தொற்றியிருந்தது.
அந்த ஐந்து சிங்கங்களிடம் இருமல், தும்மல், சோம்பல் உள்ளிட்ட இலேசான அறிகுறிகள் தென்பட்டன.