சிங்கப்பூரில் குழந்தைகளிடையே தடுப்பூசி சோதனை நடத்தப்பட விருக்கிறது. இதற்காக குழந்தைகள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் வெளியிட்ட தகவலில் குழந்தைகளிடம் தடுப்பூசி செயல்திறன் எப்படியிருக்கிறது என்பது குறித்து ஆய்வு நடத்தப்படுவதாக கேகே தாய், சேய் நல மருத்துவமனை தெரிவித்தது.
இதில் ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்க முடியும். ஆனால் இதற்கு முன்பு அவர்கள் கிருமித் தொற்றால் பாதிக்கப்படாதவர்களாக இருக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் சம்மதிக்க வேண்டும் என்று அந்தத் தகவல் குறிப்பிட்டது.
ஆய்விலிருந்து திரட்டப்படும் தரவுகள், கிருமித்தொற்றுக்கு எதிராக குழந்தைகளைப் பாதுகாக்கும் தடுப்பூசி கொள்கைகளை வகுக்க உதவும்.
இதில் இணைந்துகொள்ளும் தொண்டூழியர்களுக்கு செலவு ஈடு செய்யப்படும்.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அண்மையில் 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அங்கீகாரம் வழங்கியது.
அப்போது முதல் சிங்கப்பூரில் உள்ள பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட ஆர்வம்காட்டி வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
இது குறித்து நிபுணர் குழு அடுத்த சில வாரங்களில் பரிந்துரைகளை வழங்கும் என்று அமைச்சர் கூறியிருந்தார்.