'கிரியேட்டிவ் டெக்னாலஜி' இயக்குநர் ஜார்ஜ் இயோ
'கிரியேட்டிவ் டெக்னாலஜி' என்ற உள்ளூர் மின்னணு நிறுவனத்தின் அமலாக்க அதிகாரமற்ற சுயேட்சை இயக்குநராக முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ நியமிக்கப்பட்டு இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து கிரியேட்டிவ் டெக்னாலஜி நிறுவனத்தின் பங்குகள் ஏறத்தாழ 13% அதாவது 27 காசு அதிகமாகி ஒரு பங்கு $2.35 என்ற விலைக்கு நேற்றுக் கைமாறியது.
"அனைத்துலக விவகாரங்களில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் திரு இயோவுக்கு இருக்கிறது. தலைமைத்துவப் பணிகளையும் அவர் மேற்கொண்டு வந்துள்ளார். இவை கிரியேட்டிவ் டெக்னாலஜி நிர்வாக சபைக்கு பெரும் மதிப்பை ஏற்படுத்தித்தரும். அவருடைய வழிகாட்டலும் ஆதரவும் நிறுவனத்திற்குப் பயன்மிக்கதாக இருக்கும்," என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சிம் வோங் ஹூ தெரிவித்துள்ளார்.
நடமாட்ட வாகன விபத்து: ஆடவருக்கு சிறை, அபராதம்
பிடோக் சவுத் அவென்யூ 1ல் உள்ள புளோக் 23 அருகே நடைபாதை வழியில் 2019 ஜூலை 7ஆம் தேதி, டிெயன் வெய் ஜி, 35, என்பவரின் தனிநபர் நடமாட்ட சாதனத்தில் 77 வயது முதியவர் அடிபட்டுவிட்டார். அவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் 102 நாட்கள் தங்கி சிகிச்சை பெறவேண்டியதாயிற்று.
அந்தச் சம்பவம் தொடர்பில் டியென் சென்ற ஆண்டு கைதானார். அவருக்குப் பிணை அனுமதிக்கப்பட்டது.
வெளியே இருந்த டியென், இந்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதி தன் நண்பர்களுடன் மதுபானம் குடித்துவிட்டு பிடோக் நார்த் ஸ்திரீட்டில் உள்ள புளோக் 534க்குப் பக்கத்தில் இருக்கும் நடைபாதையில் தனது தனிநபர் நடமாட்ட சாதனத்தை ஓட்டிச் சென்று வேறு ஒரு முதியவர் மீது மோதிவிட்டார்.
பாதிக்கப்பட்ட முதியவருக்கு உதவுவதற்குப் பதிலாக டியென் அவரை திட்டினார். அவரை கையால் குத்தினார். நான்கு குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்ட டியெனுக்கு ஒன்பது வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. $1,500 அபராதம் செலுத்தும் படி அவருக்கு உத்தரவிடப்பட்டது. டியெனுக்கு $15,000 பிணை அனுமதிக்கப்பட்டது. அவர் டிசம்பர் 7ஆம் தேதி தண்டனையை அனுபவிக்க முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
மின்னாவியாக்கிகளைத்
திருடியவருக்குத் தண்டனை
விநியோக ஊழியர் ஒருவரிடம் இருந்து மின்னாவியாக்கி களைத் (இவேப்பரைசர்) திருடி அதிக விலைக்கு விற்கலாம் என்று ஜஸ்டின் கியோங் சுவீ என்ற ஆடவர், இரண்டு பேருடன் சேர்ந்து திட்டம் போட்டார். ஆனால் அந்த விநியோக ஊழியர் விழித்துக்கொண்டு போலிசுக்குத் தகவல் தெரிவித்தார். மூவரும் சிக்கினர்.
ஜஸ்டினுக்கு இரண்டு வார சிறைத் தண்டனையும் $2,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதர இருவரின் வழக்கு நிலுவையில் உள்ளது.
மின்னாவியாக்கிகளை, அவற்றின் பகுதிப் பொருட்களைச் சட்டவிரோதமாக விற்றதன் தொடர்பில் ஜூலை மாதத்திற்கும் அக்டோபர் மாதத்திற்கும் இடையில் எட்டுப்பேர் மீது சுகாதார அறிவியல் ஆணையம் வழக்குத் தொடுத்துள்ளது. அவர்களிடம் இருந்து $70,000க்கும் அதிக மதிப்புள்ள கருவிகளும் பகுதிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிங்கப்பூர், இந்தியா, தாய்லாந்து முத்தரப்பு கடற்பயிற்சி
சிங்கப்பூர், இந்தியா, தாய்லாந்து கடற்படைகள் இம்மாதம் 15 மற்றும் 16ஆம் தேதிகளில், அந்தமான் கடலில் மூன்றாவது முத்தரப்புக் கடல் பயிற்சியை நடத்தியதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. அந்தப் பயிற்சியைத் தாய்லாந்து அரசு கடற்படை ஏற்று நடத்தியது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டு பயிற்சியும் மெய்நிகர் ரீதியில் திட்டமிடப்பட்டது. பயிற்சியின்போது மூன்று நாடுகளின் கடற்படை வீரர்களுக்கு இடையில் நேரடி தொடர்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, இந்தப் பயிற்சியில் கலந்துகொண்ட ஆர்எஸ்எஸ் டெனாசியஸ் என்ற சிங்கப்பூர் கடற்படை கப்பலின் தளபத்திய அதிகாரியான லெஃப்டிணன்ட் கர்னல் துங் வான்லிங், வெற்றிகரமான முறையில் நடந்து முடிந்த பயிற்சி, இந்த மூன்று நாடுகளின் கடற்படைக்கு இடையில் நீண்டகாலமாக இருந்து வரும் வலுவான உறவை எடுத்துக்காட்டும் ஒன்று என்று தெரிவித்தார்.