பொதுப் பயனீட்டுக் கழகத்தில் உதவிப் பொறியாளராக பணியாற்றிய ஜமாலுதின் முகம்மது, 58, என்ற அதிகாரி அந்தக் கழகத்தின் ஒப்பந்ததாரர்களும் துணை ஒப்பந்த தாரர்களும் மேற்கொள்ளும் பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்தார்.
தண்ணீர், எரிவாயுக் குழாய் பதிப்பு துணை ஒப்பந்த நிறுவனமான 'பைப் ஒர்க்ஸ்' என்ற நிறுவனத்தை மேற்பார்வையிட்டபோது அவர் அந்த நிறுவனத்தின் திட்ட நிர்வாகியை அணுகினார்.
பணம் வாங்கிக்கொண்டு அந்த நிறுவனத்தின் பணிகளை வேகமாக முடிக்க வசதிகளைச் செய்து கொடுக்க ஜமாலுதின் இணங்கினார். ஒன்பது மாத காலத்தில் அவர் மொத்தம் $45,169 தொகையைப் பெற்றுக்கொண்டார்.
லஞ்சம் பெற்றதற்காக ஜமாலுதினுக்கு நேற்று ஒன்பது மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஒரு கட்டுமான பொறியியல் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற முயன்றதற்காக அவருக்கு 10 வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கணக்குகளில் பொய் தகவல்களைத் தெரிவித்ததற்காக அவருக்கு இரண்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தண்டனை, இதர சிறைத்தண்டனைகளுடன் ஏககாலத்தில் தொடங்கும்.
லஞ்சமாகப் பெற்றுக்கொண்ட தொகையைத் தண்டத் தொகையாகச் செலுத்தும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது. செலுத்த தவறினால் மூன்று மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும்.
குற்றங்களை ஜமாலுதின் ஒப்புக்கொண்டார்.
பைப் ஒர்க்ஸ் நிறுவனத்தின் திட்ட நிர்வாகியான கணேசன் சுப்பையா என்பவர் மீது ஆகஸ்ட் மாதம் ஓர் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஜமாலுதின் ரசீதுகளில் பொய் தகவல்களை இடம்பெறச் செய்ய உடந்தையாக இருந்ததாகக் கூறும் இரண்டு குற்றச்சாட்டுகளையும் கணேசன் எதிர்நோக்குகிறார்.
இவரது வழக்கு, விசாரணைக்கு முந்தைய விசாரணைக் கட்டத்தில் இருக்கிறது.