சிங்கப்பூரில் ஏறத்தாழ 1,000 உள்ளூர் நிறுவனங்களின் மின்னிலக்கமய முயற்சிகளுக்கு அடுத்த மூன்றாண்டுகளில் ஆதரவு கிடைக்கவிருக்கிறது.
அந்த ஆதரவின் மூலம் அந்த நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களைப் பெறலாம்.
வர்த்தகப் பங்காளிகளை அடையாளம் காணலாம். புதிய ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளலாம். வேலை முறைகளைத் திருத்தி அமைக்கலாம்.
ஜூரோங் நகராண்மைக் கழகம் நேற்று ஜூரோங் புத்தாக்க மாவட்டத்தில் புதிய தொழில்துறை இணைப்பு அலுவலகத்தை தொடங்கியது.
அந்த அலுவலகம், மேலும் பல உற்பத்தியாளர்களுக்கு குறிப்பாக சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவி அவற்றின் உருமாற்றச் செயல்திட்டங்களை வேகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய அலுவலகத்தின் உதவியுடன் மின்னிலக்க உருமாற்றம் பற்றி மேலும் பலவற்றை நிறுவனங்கள் தெரிந்துகொள்ளலாம் என்று கழகம் குறிப்பிட்டது.
இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் 1,000 நிறுவனங்களில் 300 நிறுவனங்கள் அடையாளம் காணுதல், ஆலோசனை, பயிற்சி சேவைத் திட்டங்களில் ஈடுபட்டு புதிய தொழில்நுட்பங்களைக் கைகொள்ளும். அவற்றின் ஊழியர் அணி தேர்ச்சிகளும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அலுவலக தொடக்க நிகழ்ச்சியில் பேசிய வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், உற்பத்தித் தொழில்துறை சிங்கப்பூருக்கு மிக முக்கியமான ஒரு துறை என்றார்.
உற்பத்தி நடைமுறைகளை மின்னிலக்கமயமாக்கும் முயற்சியில் இந்த அலுவலகம் குறிப்பிடத்தக்க முக்கியமான ஒரு மைல்கல் என்றார் அமைச்சர்.
பல்வேறு நிறுவனங்களையும் எட்டுவதற்கு புதிய அலுவலகம் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக 13 பங்காளி நிறுவனங்கள், பல நிறுவனங்களுக்கும் மின்னிலக்க உருமாற்றத் தீர்வுகளுடன் உதவும்.