இவ்வாண்டின் தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) முடிவுகள் அடுத்த புதன்கிழமை 24ஆம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளுக்குச் சென்று தேர்வு முடிவுகளைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகமும் கூட்டாக வெளியிட்ட செய்தி அறிக்கையில் இதைத் தெரிவித்தன.
தேர்வு முடிவுகளை காலை 11 மணியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். முடிவுகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுடன் பெற்றோர் அல்லது காப்பாளர் ஒருவர் மட்டும் உடன் செல்லலாம் என்று அமைப்புகள் கூறின.
ஆனால் பெற்றோர் அல்லது காப்பாளர், வகுப்பறைகளுக்குள் அல்லது அவற்றின் அருகே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவை குறிப்பிட்டன.
கூட்டநெரிசலையும் ஒன்றுகூடுவதையும் தவிர்க்க, பிள்ளைகள் வகுப்பறைகளில் முடிவுகளைப் பெற்றுக்கொள்ளும்போது பெற்றோர் குறிப்பிடப்பட்ட இடங்களில் காத்திருக்க வேண்டும்.